வேன் டிரைவர், கிளனர் மீது தாக்குதல்: சுங்கச்சாவடி ஊழியர்களை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல், 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு


வேன் டிரைவர், கிளனர் மீது தாக்குதல்: சுங்கச்சாவடி ஊழியர்களை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல், 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 25 April 2019 5:00 AM IST (Updated: 25 April 2019 12:47 AM IST)
t-max-icont-min-icon

வேன் டிரைவர், கிளனர் மீது தாக்குதல் நடத்திய சுங்கச்சாவடி ஊழியர்களை கண்டித்து சக டிரைவர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

செங்குன்றம்,

சென்னை புழல் பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 34), வேன் டிரைவர். இவரது வேனில் அதே பகுதியை சேர்ந்த ஜேம்ஸ் (27) என்பவர் கிளனராக உள்ளார். நேற்று காலை தனியார் கம்பெனியை சேர்ந்த 25 ஊழியர்களை வேனில் ஏற்றிக்கொண்டு கவரப்பேட்டை நோக்கி இருவரும் சென்று கொண்டிருந்தனர்.

பாடியநல்லூர் சுங்கச்சாவடியில் சென்றபோது அங்கிருந்த ஊழியர், வரி வசூலுக்கான டோக்கன் வாங்கும்படி கூறினார். அதற்கு டிரைவர் பன்னீர்செல்வம், மாதாந்திர பாஸ் உள்ளதாக கூறினார்.

ஆனால் மாதாந்திர பாஸ் நேற்றுடன் முடிவடைந்துவிட்டதாக கூறி, பணம் கொடுக்கும்படி சுங்கச்சாவடி ஊழியர் கேட்டார். இதனால் அவர்களுக் குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது கவுண்ட்டரில் அமர்ந்து இருந்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஆகாஷ் (25) உள்பட சக சுங்கச்சாவடி ஊழியர்கள் ஒன்று சேர்ந்து வேன் டிரைவர் பன்னீர்செல்வம், கிளனர் ஜேம்ஸ் இருவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் இருவரும் காயம் அடைந்து, தலையில் ரத்தம் கொட்டியது.

இதை கண்ட அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள், சுங்கச்சாவடி ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்தனர். இதற்கிடையில் இதுபற்றி தகவல் அறிந்ததும் இருவரின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் என 150-க்கும் மேற்பட்டோர் சுங்கச்சாவடிக்கு திரண்டு வந்தனர்.

இதனால் பயந்துபோன சுங்கச்சாவடி ஊழியர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், சுங்கச்சாவடியில் உள்ள 2 கவுண்ட்டர்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் என அனைவரும் அந்த சுங்கச்சாவடி முன்பு சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

தகவல் அறிந்ததும் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி, பொன்னேரி துணை போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார், இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

டிரைவர், கிளனரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். அதை ஏற்று சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story