சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்- கலெக்டர் அருண் உத்தரவு
சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கலெக்டர் அருண் உத்தரவிட்டார்.
புதுச்சேரி,
சாலை பாதுகாப்பு குழுவின் கூட்டம் கலெக்டர் அலுவலக கருத்தரங்க அறையில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட சாலை பாதுகாப்பு குழுவின் தலைவரும், கலெக்டருமான அருண் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டுகள் ராகுல் அல்வால், மகேஷ்குமார் பன்வால், போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் மற்றும் நகராட்சி ஆணையர்கள், கல்வித்துறை, பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட அரசுத்துறைகளின் இயக்குனர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அப்போது போக்குவரத்து விதிமுறை மீறல் தொடர்பான படக்காட்சிகளும் காட்டப்பட்டன. அதைத்தொடர்ந்து கலெக்டர் அருண், பஸ் நிறுத்துமிடம், விபத்து ஏற்படும் பகுதி குறித்து ஒளிரும் தன்மையுடைய அறிவிப்புகளை வைக்கமாறு அறிவுறுத்தினார். சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள், விளரம்பர பலகைகளை அகற்ற காவல்துறை, நகராட்சி மற்றும் சம்பந்தபட்ட துறைகள் இணைந்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
நகராட்சிகள் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாகன நிறுத்துமிடம், பஸ் நிறுத்துமிடம் தொடர்பாக போக்குவரத்து துறை, போக்குவரத்து போலீசாருடன் இணைந்து ஆலோசித்து அறிவிப்பு வெளியிட கேட்டுக்கொண்டார். காவல்துறை முறையாக போக்குவரத்து விதிகளை அமல்படுத்தவும் வலியுறுத்தினார்.
இதற்காக ஒரு இலக்கு நிர்ணயித்து அதை அடைய செயல்பாடுமாறு அறிவுறுத்தினார். சாலை பாதுகாப்பு தொடர்பான விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.