சமூக வலைதளங்களில் தவறான குறுஞ்செய்திகளை பகிர்ந்தால் கடும் நடவடிக்கை கலெக்டர்–போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை


சமூக வலைதளங்களில் தவறான குறுஞ்செய்திகளை பகிர்ந்தால் கடும் நடவடிக்கை கலெக்டர்–போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
x
தினத்தந்தி 25 April 2019 4:00 AM IST (Updated: 25 April 2019 1:29 AM IST)
t-max-icont-min-icon

சமூக வலைதளங்களில் தவறான குறுஞ் செய்திகளை பகிர்பவர்கள் மீதும் அதன் குழு தலைவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிவகங்கை மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:–

சமீபத்தில் சமூக வலைதளங்களில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தை பற்றி 2 பேர் தவறாக பேசிய வீடியோ வெளியானது. இதைத் தொடர்ந்து அவ்வாறு அவதூறாக பேசியவர்கள் மீது சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இது போன்ற தேவையற்ற சட்டத்திற்கு புறம்பான செயல்களினால் அமைதியாக வசித்து வரும் பல்வேறு சமுதாய மக்களிடையே பிரச்சினை ஏற்பட்டு, பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுகிறது. சட்டம் ஒழுங்கு பாதிக்கிறது. எனவே இது போன்று வரும் வதந்தி மற்றும் குறுஞ்செய்திகளை பொதுமக்கள் யாரும் நம்பவேண்டாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இவ்வாறு தவறாக வரும் குறுஞ்செய்திகளை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி தவறான குறுஞ்செய்திகளை பகிரும் நபர்களை அந்த குழுத்தலைவர் குழுவில் இருந்து நீக்கம் செய்து அது குறித்து சம்பந்தப்பட்ட காவல்துறைக்கு உடனடியாக புகார் செய்ய வேண்டும். இதை செய்ய தவறும் பட்சத்தில் குறுஞ்செய்திகளை வெளியிடுபவர்கள் மீதும், பகிர்பவர்கள் மீதும், அந்தக் குழுத்தலைவர் மீதும் வழக்குகள் பதிவு செய்து சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு பொது அமைதியை பாதிக்கும் தவறான குறுஞ்செய்திகளை யாராவது வெளியிட்டு இருந்தால் அது குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றது. அவ்வாறு தெரிவிக்கும் பட்சத்தில் அதன் மீது சட்டப்படியான கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதேபோல் ஒரு குறுஞ்செய்திக்கு மாற்றுக் குறுஞ்செய்தி என அதே பாணியில் வெளியிடுவதும் சட்டப்படி தவறானதாகும். இவ்வாறு செய்வதை தவிர்க்க வேண்டும்.

மேலும் காவல்துறையில் தொழில் நுட்ப பிரிவில் உள்ள பயிற்சி பெற்ற காவலர்களைக் கொண்டு சமூக வலைதளங்களை கண்காணிக்கும் பொருட்டு, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒரு குழு அமைக்கப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறது.

எனவே இதுபோன்று பொதுமக்களிடையே ஜாதி ரீதியான பகைமை உணர்வை தூண்டுவது, பல்வேறு சமுதாய மக்களிடம் நிலவி வரும் ஒற்றுமை மற்றும் பொது அமைதியை சீர்குலைப்பது, சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவது போல் உணர்வை தூண்டுவது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.


Next Story