மகனை அரிவாளால் வெட்ட முயன்ற பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்ய கோர்ட்டு உத்தரவு


மகனை அரிவாளால் வெட்ட முயன்ற பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்ய கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 25 April 2019 3:45 AM IST (Updated: 25 April 2019 1:35 AM IST)
t-max-icont-min-icon

ஆர்.எஸ்.மங்கலத்தில் மகனை அரிவாளால் வெட்ட முயன்ற பெற்றோர் உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்ய கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ஆர்.எஸ்.மங்கலம்,

ஆர்.எஸ்.மங்கலம்–பரமக்குடி சாலையில் குடியிருந்து வருபவர் அமீர் மைதீன். இவரது மனைவி சீனி செய்யது. இவர்கள் தங்கள் மகன்களான அரசப் அலிக்கு வீட்டின் கீழ்தளத்தையும், அன்வர்தீனுக்கு மேல்தளத்தையும் எழுதிக் கொடுத்துள்ளனர். இதன்படி குடியிருந்து வந்த அசரப் அலிக்கு தந்தை அமீர் மைதீன், தாய் சீனி செய்யது மற்றும் சகோதரர் அன்வர்தீன் ஆகியோர் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அசரப்அலி குடியிருந்த வீட்டை விட்டு வெளியேறி உள்ளூரில் உள்ள மாமனார் வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த மாதம் அசரப் அலியின் மகன் தனது கல்வி சான்றிதழ்களை எடுப்பதற்காக அந்த வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த 3 பேரும் இங்கு ஏன் வந்தாய்? என்று கேட்டு தரக்குறைவாக பேசி திருப்பி அனுப்பினார்களாம். இதுகுறித்து அவர் தன் தந்தையிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து அசரப் அலி இதுபற்றி கேட்பதற்காக அங்கு சென்றாராம். அப்போது அவரது பெற்றோரும், சகோதரரும் அசரப்அலியை அரிவாளை எடுத்து வெட்ட வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அசரப்அலி ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதுபற்றி வழக்கு பதிவு செய்யாமல் போலீசார் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.

அதனை தொடர்ந்து அவர் திருவாடானை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். அதன் அடிப்படையில் மனுவை விசாரணை செய்த நீதிபதி பாலமுருகன் இந்த புகார் தொடர்பாக அன்வர்தீன், தந்தை அமீர்தீன் மற்றும் தாய் சீனி செய்யது ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய ஆர்.எஸ்.மங்கலம் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


Next Story