குளச்சல் பகுதியில் கடல் சீற்றம் வீடுகளை விட்டு மக்கள் வெளியேறியதால் பரபரப்பு


குளச்சல் பகுதியில் கடல் சீற்றம் வீடுகளை விட்டு மக்கள் வெளியேறியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 25 April 2019 4:30 AM IST (Updated: 25 April 2019 1:37 AM IST)
t-max-icont-min-icon

குளச்சல் பகுதியில் கடல் சீற்றமாக காணப்பட்டது. வீடுகளை விட்டு மக்கள் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

குளச்சல்,

இந்திய பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்க கடலில் 29-ந் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி புயலாக மாறும். எனவே கடல் சீற்றமாக காணப்படும். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் நேற்று மதியம் குளச்சல் பகுதியில் திடீரென சூறைக்காற்று வீசியது. ராட்சத அலைகள் எழுந்து மணற்பரப்பையும் தாண்டி வந்தன. மண்டைக்காடு புதூர் மேற்கு பகுதியில் ராட்சத அலைகள் தென்னந்தோப்புகளில் புகுந்தன.

மேலும் கடல் அரிப்பு ஏற்பட்டு தென்னை மரங்கள் சாய்ந்தன. கடல் அரிப்பு ஏற்பட்டு உள்ளதால் அருகில் உள்ள ஏ.வி.எம். கால்வாயில் கடல்நீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.மேலும் அங்குள்ள 400-க்கும் மேற்பட்ட வீடுகளை கடல்நீர் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதி மீனவர்கள் பீதியடைந்து உள்ளனர்.

குளச்சல் துறைமுகம் பாலத்தில் கடல்நீர் சூழ்ந்துள்ளதால் மாலைநேரத்தில் பொழுதுபோக்க செல்லும் மக்கள் அந்த பகுதிக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். நேற்று கரை திரும்பிய விசைப்படகுகள் மீண்டும் கடலுக்கு செல்லவில்லை. பாதியிலேயே கரை திரும்பிய படகுகள் நங்கூரம் பாய்ச்சி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.

குறும்பனையில் ராட்சத அலைகள் எழுந்ததால் சகாயமாதா தெருவில் உள்ள வீடுகளை சுற்றி கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. மீனவர்களின் வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் தூங்க முடியாமல் தவித்தனர்.

மேலும் தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்து விடாமல் இருக்க மணல் மூடைகளை அடுக்கி வைத்துள்ளனர். தொடர்ந்து இரவு வரை கடல் சீற்றமாக காணப்படுவதால் மீனவர்கள் பீதியில் இருந்தனர்.

கொல்லங்கோடு அருகே மீனவ கிராமங்களான வள்ளவிளை, மார்த்தாண்டன்துறை, நீரோடிகாலனி பகுதிகளில் நேற்று காலை முதல் கடல்சீற்றமாக இருந்தது. இதனால், மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்ல முடியாமல் வீடுகளிலேயே முடங்கினர். நேற்று மதியம் திடீரென எழும்பிய ராட்சத அலைகள் கரையில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு சுவர்களை தாண்டி வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் வீடுகளில் இருந்தவர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடினர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து ராட்சத அலைகள் எழும்பி வந்ததால் கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் குடியேறினர். மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லாததால் படகுகளை கரை பகுதிகளில் நிறுத்தி வைத்திருந்தனர். ஆக்ரோஷமாக வந்த அலைகள் படகுகளை கடலுக்குள் இழுத்து சென்றன. மேலும் கடல் அலைகள் குடியிருப்பு பகுதிக்குள் வராமல் இருக்க மணல் மூடைகளை அடுக்கி தற்காலிக சுவர் எழுப்பி உள்ளனர்.

இந்த கடற்சீற்றத்தால் நித்திரவிளை, பூத்துறை, தூத்தூர் உள்ளிட்ட பகுதி மீனவர்கள் அச்சத்தில் இருந்தனர்.

Next Story