கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்ததால், பண்ணையில் வளர்க்கப்பட்ட 100 கோழிகள் செத்தன


கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்ததால், பண்ணையில் வளர்க்கப்பட்ட 100 கோழிகள் செத்தன
x
தினத்தந்தி 24 April 2019 10:30 PM GMT (Updated: 24 April 2019 9:53 PM GMT)

தாராபுரம் அருகே கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்ததால் பண்ணையில் வளர்க்கப்பட்ட 100 கோழிகள் செத்தன.

தாராபுரம்,

தாராபுரம் அருகே உள்ள துலுக்கனூர் நடுத்தோட்டத்தை சேர்ந்தவர் அர்ஜூனன் (வயது 55). இவர் தனது தோட்டத்தில் கோழிப்பண்ணை வைத்துள்ளார். கோழிப்பண்ணைகளில் கோழி நிறுவனத்திடமிருந்து குஞ்சுகளை வாங்கி, அதை 40 நாட்கள் வரை வளர்த்து கொடுப்பது வழக்கம். இவருடைய கோழிப் பண்ணையில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு 30 நாட்கள் ஆகியுள்ளது. இன்னும் 10 நாட்களுக்கு பிறகு, அவர் கோழிகளை அதன் நிறுவனத்திடம் ஒப்படைத்துவிடுவார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அருகே உள்ள ராம்நகர் பகுதியில் காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. திருவிழாவையொட்டி அன்று இரவு பட்டாசு வெடிக்கப்பட்டது. தொடர்ந்து நீண்ட நேரமாக பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால், அர்ஜூனன் கோழிப்பண்ணையில் இருந்த கோழிகள் அங்கும் இங்கும் ஓடின. சிறிதுநேரத்தில் 100 கோழிகள் செத்துப்போனது. பட்டாசு சத்தத்தால் அவை செத்துப்போனது தெரியவந்தது.

மேலும் அருகில் உள்ள தோட்டம் மற்றும் தொழுவங்களில் கட்டி வைக்கப்பட்டு இருந்த மாடுகள் மற்றும் ஆடுகள் பட்டாசுக்கு பயந்து, கயிறுகளை அறுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்தன. இதையடுத்து மாடு மற்றும் ஆடுகளின் உரிமையாளர்கள் இரவோடு இரவாக அவற்றை தேடி கண்டு பிடித்து மீண்டும் தொழுவத்திற்கு கொண்டு வந்தனர்.

நகர்பகுதியில் திருவிழாவில் பட்டாசுகளை வெடிப்பதற்கு முன்அனுமதி பெறவேண்டும் என்பது விதி, அந்தவகையில் பட்டாசு வெடிப்பதற்கு அனுமதிகோரும் போது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அருகே உள்ள விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், அனுமதி வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story