கயத்தாறு பகுதியில் சூறைக்காற்றுடன் மழை: 1,000 கொய்யா மரங்கள் வேரோடு சாய்ந்தன மின்கம்பங்கள் சேதம்; பலமணி நேரம் மின்தடை


கயத்தாறு பகுதியில் சூறைக்காற்றுடன் மழை: 1,000 கொய்யா மரங்கள் வேரோடு சாய்ந்தன மின்கம்பங்கள் சேதம்; பலமணி நேரம் மின்தடை
x
தினத்தந்தி 25 April 2019 4:00 AM IST (Updated: 25 April 2019 4:05 AM IST)
t-max-icont-min-icon

கயத்தாறு பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த மழையில் 1,000 கொய்யா மரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும் 3 மின்கம்பங்களும் தரையில் விழுந்ததால் பல மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.

கயத்தாறு, 

கயத்தாறு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மதியம் 3 மணி அளவில் சூறைக்காற்று, இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 1½ மணி நேரம் நீடித்த மழையால் சாலைகள், தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கயத்தாறு அருகே கூட்டுப்பண்ணையில் சீனிராஜிக்கு சொந்தமான தோட்டத்தில் பயிரிடப்பட்ட சுமார் ஆயிரம் கொய்யா மரங்கள் சூறைக்காற்றில் வேரோடு சாய்ந்தன.

இதேபோன்று கூட்டுப்பண்ணையில் பயிரிடப்பட்ட நூற்றுக்கணக்கான எலுமிச்சை, நெல்லிக்காய், மா, முருங்கை உள்ளிட்ட மரங்களும் சூறைக்காற்றில் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். சேதம் அடைந்த மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் கூட்டுப்பண்ணையில் இருந்து பன்னீர்குளம் செல்லும் சாலையில் 3 மின்கம்பங்களும் சூறைக்காற்றில் தரையில் விழுந்தன. அப்போது அந்த வழியாக யாரும் செல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

உடனே மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்து, அந்த மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பல மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.

Next Story