தேர்தல் பிரசாரம் ஓய்ந்த பிறகும் மகள் போட்டியிடும் தொகுதியில் தங்கிய சரத்பவார் தேர்தல் கமிஷனில் பா.ஜனதா புகார்
தேர்தல் பிரசாரம் ஓய்ந்த பிறகும் மகள் போட்டியிடும் பாராமதி நாடாளுமன்ற தொகுதியில் தங்கிய சரத்பவார் மீது தேர்தல் கமிஷனில் பா.ஜனதா புகார் அளித்துள்ளது.
மும்பை,
தேர்தல் கமிஷன் விதிமுறைப்படி, பிரசாரம் ஓய்ந்த உடன் வெளியூரை சேர்ந்த அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட தொகுதியை விட்டு வெளியேற வேண்டும். அதாவது தங்களுக்கு வாக்கு இல்லாத தொகுதியில் தங்கியிருக்க அனுமதி கிடையாது.
ஆனால் தேசியவாத காங்கிரஸ் தலைவர் தேர்தல் பிரசாரம் ஓய்ந்த பின்னரும் தனது மகள் போட்டியிடும் பாராமதி தொகுதியில் தங்கியிருந்து விதிமுறை மீறலில் ஈடுபட்டதாக தேர்தல் கமிஷனில் பா.ஜனதா புகார் செய்துள்ளது.
இது தொடர்பாக பா.ஜனதா மூத்த தலைவரும், மாநில கல்வி மந்திரியுமான வினோத் தாவ்டே நிருபர்களிடம் கூறியதாவது:-
நடவடிக்கை எடுக்க வேண்டும்
சரத்பவாருக்கு மும்பையில் வீடு உள்ளது. வாக்கும் மும்பையில் தான் உள்ளது. அவர் பாராமதிக்கு எப்போதாவது தான் செல்வது உண்டு. பாராமதி தொகுதியில் அவரது மகள் சுப்ரியா சுலே போட்டியிட்டார். கடந்த 21-ந் தேதி மாலையில் அங்கு பிரசாரம் ஓய்ந்தது. பிரசாரம் ஓய்ந்த பிறகும் சரத்பவார் அந்த தொகுதியை விட்டு வெளியேறாமல், அங்கேயே தங்கியிருந்துள்ளார். தேர்தலில் தனது மகளுக்கு உதவும்படி உள்ளூர் மக்களிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி எங்களது கட்சியை சேர்ந்த மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் சார்பில் தேர்தல் கமிஷனில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
சரத்பவார் பதில்
பா.ஜனதா கொடுத்த புகார் தொடர்பாக சரத்பவார் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பிரசாரம் ஓய்ந்த பிறகு நான் பாராமதியில் தங்குவதற்கு அனுமதிக்கப்பட கூடாது தான். ஆனால் பிரசார பொதுக்கூட்டம் முடிந்த பிறகு பாராமதியில் எந்த நிகழ்ச்சியிலும் நான் பங்கு பெறவில்லை. நான் எனது வீடு மற்றும் பண்ணையில் தான் இருந்தேன். எனக்கு ஓட்டு மும்பையில் தான் உள்ளது என்று எல்லோருக்கும் தெரியும் என்று பதிலளித்து உள்ளார்.
Related Tags :
Next Story