வீடு வழங்காமல் இழுத்தடித்த கட்டுமான அதிபருக்கு 3 ஆண்டு ஜெயில் நுகர்வோர் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு


வீடு வழங்காமல் இழுத்தடித்த கட்டுமான அதிபருக்கு 3 ஆண்டு ஜெயில் நுகர்வோர் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு
x
தினத்தந்தி 24 April 2019 10:42 PM GMT (Updated: 24 April 2019 10:42 PM GMT)

வீடு வழங்காமல் இழுத்தடித்த கட்டுமான அதிபருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து மாநில நுகர்வோர் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு அளித்தது.

மும்பை,

மும்பையை சேர்ந்த கட்டுமான அதிபர் சேகர் தடர்கர். இவர் காந்திவிலியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டினார். கடந்த 2005-ம் ஆண்டு அந்த கட்டிடத்தில் அருண் கெஜ்ரிவால் என்பவர் 1,270 சதுர அடி பரப்பளவு கொண்ட வீடு வாங்க முன்பதிவு செய்து இருந்தார். இதற்காக குறிப்பிட்ட தொகையையும் அவர் செலுத்தியிருந்தார். ஆனால் குறிப்பிட்ட காலத்தில் அவருக்கு கட்டுமான அதிபர் சேகர் தடர்கர் வீட்டை கொடுக்கவில்லை.

மாறாக அந்த வீட்டை வேறொருவருக்கு விற்று இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அருண் கெஜ்ரிவால் இதுபற்றி மாநில நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

3 ஆண்டு ஜெயில்

இந்த மனுவை விசாரித்த நுகர்வோர் கோர்ட்டு அவரிடம் வீட்டை ஒப்படைக்கும்படி கடந்த 2016-ம் ஆண்டு கட்டுமான அதிபர் சேகர் தடர்கருக்கு உத்தரவிட்டது. இருப்பினும் அவர் நுகர்வோர் கோர்ட்டு உத்தரவுப்படி அருண் கெஜ்ரிவாலுக்கு வீட்டை ஒப்படைக்கவில்லை.

இது தொடர்பாக அவர் 2017-ம் ஆண்டு மீண்டும் நுகர்வோர் கோர்ட்டை அணுகினார். அப்போது நுகர்வோர் கோர்ட்டில் ஆஜரான சேகர் தடர்கர் விரைவில் பிரச்சினையை தீர்ப்பதாக தெரிவித்தார். அதன்பின்னரும் அவர் அருண் கெஜ்ரிவாலுக்கு வீட்டை கொடுக்காமல் இழுத்தடித்து வந்தார்.

இந்தநிலையில், உத்தரவை செயல்படுத்த தவறிய கட்டுமான அதிபர் சேகர் தடர்கருக்கு நுகர்வோர் கோர்ட்டு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு அளித்தது.

இதையடுத்து கட்டுமான அதிபர் சேகர் தடர்கர் உடனடியாக ஆர்தர்ரோடு சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story