முறைகேடு புகார் காரணமாக காஞ்சீபுரம் பட்டு கைத்தறி சங்கத்தலைவர் நீக்கம்


முறைகேடு புகார் காரணமாக காஞ்சீபுரம் பட்டு கைத்தறி சங்கத்தலைவர் நீக்கம்
x
தினத்தந்தி 25 April 2019 10:15 PM GMT (Updated: 2019-04-25T22:34:56+05:30)

முறைகேடு புகார் காரணமாக காஞ்சீபுரம் அறிஞர் அண்ணா பட்டு கைத்தறி சங்கத்தலைவர் செல்வராஜ் நீக்கம் செய்யப்பட்டார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் காந்திரோட்டில் அறிஞர் அண்ணா பட்டு கைத்தறி கூட்டுறவு சங்கம் நீண்ட காலமாக பட்டு சேலை விற்பனையில் முதல் இடம் வகித்து வந்தது. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து இந்த சங்கத்திற்கென வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

புகழ்பெற்ற இந்த சங்கத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெசவாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். லாபத்தில் இந்த சங்கம் இயங்கி வந்தது. ஆனால் பல்வேறு முறைகேடுகள் காரணமாக சங்கம் நலிவடைந்தது. இந்த நிலையில், கடந்த 2017-18-ம் நிதியாண்டில் வரவு-செலவு கணக்கில் முறைகேடு நடைபெற்றதாகவும், அதை மறைக்க 44 சதவீதம் போனஸ், 25 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளதாகவும், நெசவாளர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும் இதுகுறித்து காஞ்சீபுரத்தில் உள்ள கைத்தறி துறை இணை இயக்குநர் செல்வம் விசாரணை நடத்தி முறைகேடு தொடர்பாக சங்கத் தலைவர் ஏ.செல்வராஜ் உள்பட 7 இயக்குநர்களுக்கும், நிர்வாகக்குழுவை ஏன் கலைக்க கூடாது’ எனவும் நோட்டீஸ் வழங்கினார். இதனைத்தொடர்ந்து சங்க ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன.

மேலும் அனைத்து ஊழியர்களிடமும், கைத்தறி துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதையடுத்து சங்கத்தலைவர் செல்வராஜை தகுதி நீக்கம் செய்து இணை இயக்குநர் செல்வம் உத்தரவிட்டு உள்ளார். அதற்கான உத்தரவை, செல்வராஜிடம் அதிகாரிகள் வழங்கினர்.

சங்கத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பான பிரச்சினைகளை கவனிக்க தவறியதாக அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

Next Story