பெரம்பலூரில் வீடியோ எடுத்து பெண்களுக்கு பாலியல் தொல்லை பாதிக்கப்பட்ட பெண் பேசிய ஆடியோ வெளியானதால் பரபரப்பு


பெரம்பலூரில் வீடியோ எடுத்து பெண்களுக்கு பாலியல் தொல்லை பாதிக்கப்பட்ட பெண் பேசிய ஆடியோ வெளியானதால் பரபரப்பு
x
தினத்தந்தி 25 April 2019 11:15 PM GMT (Updated: 25 April 2019 6:44 PM GMT)

பெரம்பலூரில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வீடியோ எடுத்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண் பேசிய ஆடியோ நேற்று வெளியானது. பொள்ளாச்சியை போல பெரம்பலூரில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பலூர்,

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் பெண்களை பண்ணை வீட்டுக்கு அழைத்துச்சென்று ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்ததுடன், வீடியோ எடுத்தும் மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த பரபரப்பு அடங்குவதற்குள் பெரம்பலூரை சேர்ந்த இளம்பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் சிலர் வேலைவாய்ப்பு மற்றும் இதர பிரச்சினைகளுக்காக தங்களை நாடிவரும்போது ஆசைவார்த்தை கூறி, அவர்களை முக்கிய பிரமுகர்கள் சிலர், போலி பத்திரிகையாளர் ஒருவர் உதவியுடன் பாலியல் தொந்தரவு செய்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

‘ஆடியோ’ வெளியீடு

இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், வக்கீலுமான அருள், பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுத்தார். அதில், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பல குடும்ப பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளை ஆசை வார்த்தைகள் கூறி, அ.தி.மு.க. முக்கிய பிரமுகர், போலி பத்திரிகையாளர் ஒருவர் மற்றும் சிலர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதை வீடியோ மூலம் பதிவு செய்து சம்பந்தப்பட்ட பெண்களை மிரட்டி மீண்டும், மீண்டும் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இந்த சம்பவங்களில் தொடர்புடையை அனைவரையும் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இது தொடர்பாக பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். புகார் கொடுத்த வக்கீல் அருளிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையை முடித்துவிட்டு வெளியே வந்த வக்கீல் அருள், பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், ஆடியோவை வெளியிடுவேன் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் வக்கீல் அருள், பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தன்னுடன் செல்போனில் 6 நிமிடம் 48 வினாடி பேசிய ஆடியோவை நேற்று வெளியிட்டார்.

‘இன்டர்வியூ’

அதில் இடம்பெற்ற உரையாடல் விவரம் வருமாறு:-

பாதிக்கப்பட்ட பெண்: ஹலோ வணக்கம் சார்.

வக்கீல் அருள்: சொல்லுங்கம்மா.

பெண்: சார், பெரம்பலூரில் உள்ள ஒரு லாட்ஜூக்கு இன்டர்வியூ வர சொல்லியிருந்தாங்க. நாங்க எல்லாருமே அங்க போயிருந்தோம். திடீர்னு இங்க இன்டர்வியூ கிடையாது, பெரம்பலூரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தான் இன்டர்வியூனு சொன்னாங்க. நாங்க எல்லோரும் மறுபடி அங்க போனோம்.

வக்கீல் (குறுக்கிட்டு): ரூம் நம்பர் 114ஆ...

பெண்: 114ஆ... 104ஆன்னு தெரியல. அங்க போனா அவங்க நடவடிக்கையே வேற மாதிரி இருந்தது.

மிரட்டல்

வக்கீல்: யாரும்மா அங்க இருந்தா.

பெண்: 2, 3 பேரு இருந்தாங்க. ரொம்ப மோசமா பேசினாங்க. தப்பு, தப்பா நடந்துக்கிட்டாங்க. அத வீடியோவா எடுத்தாங்க. நீ ஒத்துழைக்கலன்னா, இந்த வீடியோவை வெளியிடுவோம்னு சொன்னாங்க. அப்புறம் அவ்வப்போது எனக்கு போன் செய்து அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் பெயரை சொல்லி, அவரை நீ பார்க்க போகணும் என 2, 3 தடவை கூப்பிட்டாங்க. வரலேன்னா உன்னோட வீடியோ சமூக வலைதளங்களில் வரும்னு மிரட்டினாங்க. அந்த வீடியோவை எனக்கு அனுப்பி கூப்பிட்டுக்கிட்டே இருந்தாங்க.

வீட்டுக்கு பயந்து ஒரு தடவ அங்கே போனேன். என்னை கட்டாயப்படுத்தி குளிக்க போனு சொன்னாங்க. குளிச்சுட்டு வந்தா விட்டிருவாங்கனு குளிக்க போனேன். அங்கே எனக்கே தெரியாம வீடியோ எடுத்துட்டாங்க. அந்த வீடியோவை வச்சே என்னை மிரட்டிட்டே இருந்தாங்க. ஒரு கட்டத்துல தற்கொலை செய்வதற்கு கூட தயாராயிட்டேன்.

வக்கீல்: அப்படியெல்லாம் செய்யக்கூடாதுமா.

நிறைய பெண்கள்

பெண்: இல்ல சார், நாங்க மிடில் கிளாஸ் தான். அவங்க அளவுக்கு வசதி கிடையாது...

வக்கீல்: வீடியோ எடுத்த பையன் யாரு. பெயர் தெரியுமா?

பெண்: பேரு சரியா தெரியல.

வக்கீல்: நீங்க மட்டும் தான் அங்க இருந்தீங்களா. அல்லது வேற யாராவது கூட இருந்தாங்களா.

பெண்: நிறைய பெண்கள் இருந்தாங்க.

குளியல் வீடியோ

வக்கீல்: உங்களுக்கு மிரட்டல் இருந்துட்டே இருக்கா.

பெண்: ஆமா. இப்ப வரையும் கூட. வீட்டை விட்டு வெளியே போக முடியல. 2 நாளா சொந்தக்காரங்க வீட்டுல தான் தங்கி இருக்கோம். எனக்கு நடந்த மாதிரி வேற யாருக்கும் நடக்கக்கூடாது. என்னோட பேரு வெளியே வந்திடக்கூடாது.

வக்கீல்: இல்லம்மா. கண்டிப்பா வெளியிட மாட்டோம்.

பெண்: என்னோட குளியல் வீடியோ அவங்ககிட்ட இருக்குறதா சொன்னாங்க. சமீபத்தில் பொள்ளாச்சி வீடியோவெல்லாம் வந்ததில்லையா. அதனால ரொம்ப பயமா இருக்கு.

வக்கீல்: பொள்ளாச்சியை மிஞ்சக்கூடிய சம்பவம் இது. புகார் தெரிவிக்க மாட்டாங்க என்ற தைரியத்துல தான் இந்த மாதிரி தப்புகளை பன்னுறாங்க.

செத்து போயிடுவோம்

பெண்: இதுக்கு ஒரு தீர்வு கிடைக்கனும். ஏதாவது, ஒன்னுன்னா கண்டிப்பா எங்க வீட்டுல எல்லோரும் செத்து போயிடுவோம்?.

வக்கீல்: அப்படி சொல்லாதீங்கமா. உங்களோட பேர வெளியிடல. உங்கள மாதிரி எல்லாரும் பேசிக்கிட்டு தான் இருக்காங்க. இதுக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கனும். நான் உங்களை நேர்ல சந்திக்கிறேன். உங்களைப்பற்றிய எந்த தகவலையும் வெளியிட மாட்டோம்.

பெண்: ஓகே சார்.

இத்துடன் அந்த உரையாடல் நிறைவு பெறுகிறது.

வக்கீல் பேட்டி

பின்னர், வக்கீல் அருள் நிருபர்களிடம் கூறுகையில், இந்த ஆடியோ வெளியிட்டதால் தனக்கும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் எங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு தர வேண்டும். தேர்தல் சமயத்தில் அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் பெயரில் ஓட்டலில் பதிவு செய்யப்பட்ட அறைகளுக்கான ஆவணங்கள், இப்போது வேறு ஒருவர் பெயரில் மாற்றி திருத்துவதாக தெரிகிறது. இதற்கு போலீசார் உடந்தையாக உள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடையான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இந்த வழக்கில் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு மாற்றுவதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

பாதிக்கப்பட்ட பெண்ணும், வக்கீலும் செல்போனில் பேசிய ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Next Story