ஆற்காடு அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் 2 அரசு பஸ்கள் சிறைபிடிப்பு


ஆற்காடு அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் 2 அரசு பஸ்கள் சிறைபிடிப்பு
x
தினத்தந்தி 25 April 2019 10:30 PM GMT (Updated: 25 April 2019 6:57 PM GMT)

ஆற்காடு அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 அரசு பஸ்கள் சிறைபிடிக்கப்பட்டது.

ஆற்காடு, 

ஆற்காடு அருகே ஆயிலம் கிராமம், ஆதிதிராவிடர் காலனி பகுதியில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அப்பகுதி மக்களுக்கு கடந்த சில நாட்களாக குடிநீர் சரியாக வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஆற்காடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று காலை தங்கள் பகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி காலிக் குடங்களுடன் ஆற்காட்டில் இருந்து, அருங்குன்றம் செல்லும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

மேலும் அந்த வழியாக வந்த 2 அரசு பஸ்களை பொதுமக்கள் சிறை பிடித்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த ரத்தினகிரி போலீசார் மற்றும் ஆற்காடு வட்டார வளரச்சி அலுவலர்கள், அதிகாரிகள், வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் உடன்பாடு ஏற்படவே சாலை மறியலை பொதுமக்கள் கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story