ஆடியோவில் பரபரப்பு பேச்சு: 3 குழந்தைகளை விற்ற நர்சு, கணவருடன் அதிரடி கைது லட்சக்கணக்கில் பேரம் பேசியது அம்பலம்


ஆடியோவில் பரபரப்பு பேச்சு: 3 குழந்தைகளை விற்ற நர்சு, கணவருடன் அதிரடி கைது லட்சக்கணக்கில் பேரம் பேசியது அம்பலம்
x
தினத்தந்தி 26 April 2019 4:30 AM IST (Updated: 26 April 2019 1:05 AM IST)
t-max-icont-min-icon

ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை தொடர்பான வாட்ஸ்-அப் ஆடியோ வெளியானதை தொடர்ந்து நர்சு மற்றும் அவரது கணவர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அவர்கள் லட்சக்கணக்கில் பேரம் பேசி குழந்தைகளை விற்றது தெரியவந்தது.

ராசிபுரம், 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தட்டான்குட்டை காட்டூர் காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 55). இவர் ராசிபுரம் நகர கூட்டுறவு வங்கியில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவி அமுதவள்ளி(50). பெண் செவிலியர் உதவியாளராக(நர்சு) பணியாற்றி விருப்ப ஓய்வுபெற்றவர் ஆவார். இவர் தர்மபுரியை சேர்ந்த சதீஷ்குமார் என்பவரிடம் குழந்தை விற்பனை செய்வது தொடர்பாக பேசியதாக ‘வாட்ஸ்-அப்’ ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ரமேஷ்குமார், ராசிபுரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து நேற்று ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன், இன்ஸ்பெக்டர் செல்லமுத்து ஆகியோர் அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன் ஆகியோரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசும் அவர்களிடம் விசாரணை நடத்தினார்.

இந்த விசாரணையின்போது பள்ளிபாளையம், சேலம், பரமத்திவேலூர் மற்றும் ராசிபுரம் பகுதிகளில் செவிலியர் உதவியாளராக(நர்சாக) பணியாற்றிய அமுதவள்ளி 2012-ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்று இருப்பதும், அதன் பிறகு வறுமையில் வாடும் குடும்ப பெண்களிடம் இருந்து குழந்தைகளை வாங்கி, குழந்தை பாக்கியம் இல்லாத நபர்களுக்கு விற்பனை செய்து இருப்பதும் தெரியவந்தது.

குறிப்பாக கொல்லிமலையை சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவரிடம் இருந்து 2 பெண் குழந்தைகளை வாங்கி, அந்த குழந்தைகளின் பெற்றோருக்கு தலா ரூ.1½ லட்சம் மற்றும் ரூ.2 லட்சம் கொடுத்து இருப்பதும், அந்த குழந்தைகளை ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தை சேர்ந்த பெண் ஒருவரிடம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு லட்சக்கணக்கில் பேரம் பேசி விற்பனை செய்து இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதேபோல் சேலம் அன்னதானப்பட்டியை சேர்ந்த உறவினர் ஒருவரிடம் இருந்து குழந்தையை வாங்கி, ஓமலூரில் பதிவு செய்து மேட்டூரை சேர்ந்த ஒருவரிடம் கொடுத்து இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

இந்த 3 குழந்தைகளை விற்பனை செய்ததில் அமுதவள்ளிக்கு தொடர்பு இருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்து இருப்பதாலும், வாட்ஸ்-அப் ஆடியோவில் அமுதவள்ளி 30 ஆண்டுகளாக இந்த தொழிலை செய்து வருவதாக தெரிவித்து இருப்பதாலும், தொடர்ந்து போலீசார் அமுதவள்ளி மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரன் ஆகியோரை கைது செய்து கிடுக்கிபிடி விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகள் விற்பனை தொடர்பாக நர்சு மற்றும் அவரது கணவர் ஆகியோர் அதிரடியாக கைதாகி உள்ள சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு கூறியதாவது:-

அமுதவள்ளி ஒரு குழந்தையை மட்டும் சட்டப்படி விற்பனை செய்து இருப்பதாகவும், மற்ற குழந்தைகளை சட்டத்திற்கு புறம்பாக விற்பனை செய்து இருப்பதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரிவித்து உள்ளார். இதில் அவரது கணவர் ரவிச்சந்திரனுக்கும் தொடர்பு உள்ளது. எனவே இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் ‘வாட்ஸ்-அப்‘ ஆடியோவில் பேசிய அமுதவள்ளி நகராட்சி அதிகாரிகளை சரிக்கட்டி குழந்தை உங்களுக்கு பிறந்தது போன்று பிறப்பு சான்றிதழ் பெற்று தருகிறேன் எனக் கூறி இருப்பதால், ராசிபுரம் நகராட்சியில் சமீபகாலமாக கொடுக்கப்பட்ட பிறப்பு சான்றிதழ்களை சரிபார்க்கவும், அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

இதற்கிடையே அமுதவள்ளி மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரன் ஆகிய இருவரும் வேறு எங்கெல்லாம் குழந்தைகளை வாங்கி விற்பனை செய்து உள்ளார்கள்? இந்த விவகாரத்தில் யாருக்கு எல்லாம் தொடர்பு உள்ளது? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் உத்தரவின்பேரில், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் ரஞ்சித் பிரியா, சுகாதார உதவி இயக்குனர் நக்கீரன் ஆகியோரும் அமுதவள்ளியிடம் விசாரணை நடத்தினர்.

Next Story