வேலாயுதம்பாளையம் அருகே இருதரப்பினர் மோதல்; 15 பேர் மீது வழக்கு


வேலாயுதம்பாளையம் அருகே இருதரப்பினர் மோதல்; 15 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 26 April 2019 4:30 AM IST (Updated: 26 April 2019 2:07 AM IST)
t-max-icont-min-icon

வேலாயுதம்பாளையம் அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய் துள்ளனர்.

வேலாயுதம்பாளையம்,

வேலாயுதம்பாளையம் அருகே நாணப்பரப்பில் உள்ள மாரியம்மன் கோவிலில் பூக்குழி இறங்கும் திருவிழா நடைபெற்றது. திருவிழாவையொட்டி நாணப்பரப்பை அடுத்த கக்கன் காலனியில் உள்ள ஒரு தரப்பை சேர்ந்த பொதுமக்கள், மாரியம்மன் கோவிலில் இருந்து மண் எடுத்து வந்தனர். அந்த மண்ணை கக்கன் காலனியில் உள்ள ஒரு கோவிலில் வைத்து வழிபாடு நடத்தினர். பின்னர் மஞ்சள் நீராட்டு நடை பெற்றது.

இதில் பொதுமக்கள் மஞ்சள்நீரை ஊற்றியபடி ஊர்வலமாக அப்பகுதியில் மற்றொரு தரப்பினர் வசிக்கும் தெரு வழியாக வந்தனர். அப்போது அங்குள்ள பெண்கள் மீது மஞ்சள்நீர் பட்டுள்ளது. இது பற்றி அந்த தெருவை சேர்ந்தவர்கள் கேட்டபோது, இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அப்போது அந்த தெருவை சேர்ந்த சிலர் தங்களை தாக்கியதாக கூறி, ஒரு தரப்பை சேர்ந்த பொதுமக்கள் அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்த போலீஸ் துணை சூப்பிரண்டு கும்மராஜா தலைமையிலான போலீசார் அங்கு வந்து மறியலில் ஈடுபட்டவர் களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் அவர்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அங்கு ஆயுதப்படை போலீசார் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் தடியடி நடத்தி, மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து போக செய்தனர். இந்நிலையில் சிலர் போலீசார் மீது கற்களை வீசினர். இதில் கக்கன் காலனியை சேர்ந்த 5 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக வேலாயுதம் பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த மோதல் தொடர்பாக இருதரப்பை சேர்ந்தவர்களும் தனித்தனியாக வேலாயுதம் பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின்பேரில் போலீசார் அருள், விஜயன், அறிவழகன், அன்பழகன், இம்ரான், நவாஸ்கான், நூர்முகமது, சாதிக்பாட்சா ஆகிய 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் சாலைமறியலில் ஈடுபட்டதாக 7 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மொத்தம் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அங்கு அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க ஆயுதப்படை போலீசார் நேற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மோதலில் காயமடைந்த கக்கன் காலனியை சேர்ந்தவர்கள் வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை இந்து முன்னணி மாநில தலைவர் கடேஸ்வரன் சுப்பிரமணி நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து கக்கன் காலனிக்கு ஊர்வலமாக சென்று அங்கு நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தார். 

Next Story