மாயனூர் அருகே புதருக்குள் மறைந்து கிடந்த 2 கோவில்களை மீட்டெடுத்த பொதுமக்கள்


மாயனூர் அருகே புதருக்குள் மறைந்து கிடந்த 2 கோவில்களை மீட்டெடுத்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 26 April 2019 4:15 AM IST (Updated: 26 April 2019 2:10 AM IST)
t-max-icont-min-icon

மாயனூர் அருகே புதருக்குள் மறைந்து கிடந்த 2 கோவில்களை மீட்டெடுத்த பொதுமக்கள் அக்கோவில் களில் பூஜை நடத்த வழி பிறக்குமா என எதிர்பார்ப்பில் உள்ளனர்.

கிருஷ்ணராயபுரம்,

பண்டைய காலந்தொட்டு ஆன்மிகம் என்பது தமிழர்களின் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. தமிழகத்தை ஆண்ட மன்னர்கள் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய கோவில்கள் பலவற்றை கட்டி பூஜைகள் செய்து திருவிழாக்களை நடத்தி உள்ளனர். அதுபோல் அந்தந்த பகுதியில் வாழ்ந்த பொதுமக்கள் கிராம காவல் தெய்வங்களுக்கு கோவில்களை கட்டி திருவிழாக்களை நடத்தி இன்றும் வழிபட்டு வருகின்றனர். இது தவிர குலதெய்வ வழிபாட்டுக்காகவும் ஒவ்வொரு சமுதாயத்தினரும் தனியாக கோவில்களை கட்டியுள்ளனர்.

இப்படி மக்கள் வாழ்விடங் களில் எல்லாம் கட்டப்பட்ட கோவில்கள் மக்களுக்கு மன அமைதியை தந்ததுடன் அங்கு நடத்தப்படும் திருவிழாக்கள் சமூக ஒற்றுமையும் ஏற்படுத்தி வந்தது. இப்படி ஆன்மிகம் வளர்ந்தால் மக்கள் நல்லொழுக்கம், நற்சிந்தனையுடன் வாழ்வார்கள் என கருதித்தான் நம் முன்னோர்கள் கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று கூறி சென்றுள்ளனர்.

பல ஆண்டுகளாக...

இப்படி கட்டப்பட்ட பழமையான கோவில்கள் பலவும் அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் இடம்பெயர்ந்து சென்று காரணத்தால் இன்று பராமரிக்கப்படாமல் சிதிலமடைந்து காணப்படுகின்றன. அந்த வகையில் கரூர் மாவட்டம், மாயனூரிலிருந்து கட்டளை செல்லும் வழியில் காவிரிஆற்றின் தென் கரையில் மேலமாயனூர் பகுதியில் 2 கோவில்கள் புதர்கள் சூழ்ந்து பல ஆண்டுகளாக வெளியில் தெரியாத வண்ணம் இருந்து வந்தது. இதனால் இக்கோவில்களை பற்றிய விவரங்கள் அப்பகுதி மக்களுக்கு தெரியவில்லை. தற்போது இதுகுறித்து அறிந்த அவர்கள் அக்கோவில்களை மீட்டெடுக்க முடிவு செய்தனர். அதன்படி பொதுமக்கள் ஒன்று சேர்ந்து புதர்களை வெட்டி அகற்றி அந்த பகுதியை சுத்தம் செய்தனர்.

எதிர்பார்ப்பு

இதில் ஒரு கோவில் செங்கல், சுண்ணாம்பு கலவை கொண்டு கோபுரத்துடன் கட்டப்பட்ட பழமையான பெருமாள் கோவில் என்பதும், மற்றொரு கோவில் 16 கல்தூண்களுடன் கொண்ட மண்டபம், சிறிய அளவில் கோபுரத்துடன் கல்தூண், செங்கல், சுண்ணாம்பு கலவை கொண்டு கட்டப்பட்ட சிவன் கோவில் எனவும் தெரிய வந்தது. ஆனால் கருவறையில் எந்த சாமி சிலைகளும் இல்லை. சிவன் கோவில் என கருதப் படும் கோவிலில் சிவலிங்கம் வெளியில் தனியாக உள்ளது. அக்கோவிலில் பல கல்தூண்கள் கீழே சாய்ந்து கிடப்பதால் கோவிலின் அமைப்பு இன்னும் பெரியதாக இருந்திருக்கும் என தெரிகிறது.

இப்படி தாங்கள் மீட்டெடுத்த கோவிலை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், தொல்பொருள் துறையினர் பார்வையிட்டு எப்போது கட்டப்பட்ட கோவில்கள் என்பதையும், அங்கு கல்வெட்டுகள் எதுவும் உள்ளனவா என்பதையும் ஆராய வேண்டும். மேலும் சிதிலமடைந்த பகுதிகளை சீரமைத்து சிலைகளை கருவறையில் வைக்க ஏற்பாடு செய்து, தினம் ஒரு கால பூஜையாவது நடத்த வழி பிறக்குமா? என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். 

Next Story