சிதம்பரம் அருகே, முதலை இழுத்து சென்ற விவசாயியின் உடல் கரை ஒதுங்கியது


சிதம்பரம் அருகே, முதலை இழுத்து சென்ற விவசாயியின் உடல் கரை ஒதுங்கியது
x
தினத்தந்தி 25 April 2019 10:45 PM GMT (Updated: 25 April 2019 10:45 PM GMT)

சிதம்பரம் அருகே முதலை இழுத்து சென்ற விவசாயியின் உடல் கரை ஒதுங்கியது.

கடலூர், 

சிதம்பரம் அருகே உள்ள வல்லம்படுகை பெராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் ஜெயமணி (வயது 45). விவசாயி. நேற்று முன்தினம் இரவு இவர் தனது நிலத்தில் வேலையை முடித்துவிட்டு, பழைய கொள்ளிடம் ஆற்றில் தனது மனைவி முத்துலட்சுமியுடன் குளிக்க சென்றார். அப்போது அங்கு குளித்துக்கொண்டிருந்த ஜெயமணியை, முதலை ஒன்று திடீரென தண்ணீருக்குள் இழுத்து சென்றது.

இது குறித்து தகவல் அறிந்த சிதம்பரம் தீயணைப்பு நிலைய வீரர்கள், அண்ணாமலை நகர் போலீசார் மற்றும் அப்பகுதி மக்கள் படகுகள் மூலம் ஜெயமணியை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு முழுவதும் தீவிரமாக தேடியும் ஜெயமணியின் கதி என்ன என்று தெரியவில்லை.

இந்த நிலையில் ஜெயமணி குளித்துக்கொண்டிருந்த இடத்துக்கு அருகே நேற்று காலையில் அவரது உடல் கரை ஒதுங்கியது. மேலும் அவரது உடல் முழுவதும் முதலை கடித்ததற்கான தடங்கள் இருந்தன.

பின்னர் ஜெயமணியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story