இலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி, சந்தேகப்படும் நபர்கள் யாரும் தமிழக கடல் பகுதி வழியாக செல்லவில்லை - கடலோர போலீஸ் ஏ.டி.ஜி.பி. வன்னியபெருமாள் பேட்டி


இலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி, சந்தேகப்படும் நபர்கள் யாரும் தமிழக கடல் பகுதி வழியாக செல்லவில்லை - கடலோர போலீஸ் ஏ.டி.ஜி.பி. வன்னியபெருமாள் பேட்டி
x
தினத்தந்தி 25 April 2019 10:45 PM GMT (Updated: 25 April 2019 11:18 PM GMT)

“இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக சந்தேகப்படும்படியான நபர்கள் யாரும் தமிழக கடல் பகுதி வழியாக செல்லவில்லை” என்று கடலோர போலீஸ் ஏ.டி.ஜி.பி. வன்னிய பெருமாள் கூறினார்.

ராமேசுவரம்,

இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழக கடல் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இலங்கை குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புடையவர்கள் தமிழக கடல் பகுதி வழியாக தப்பிவிடாமல் இருக்கவும், தமிழகத்தில் புகுந்து விடாமல் இருக்கவும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த பணியில் இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர். 4 கப்பல்களில் ராமேசுவரம் தனுஷ்கோடி முதல் நாகப்பட்டினம் வரையிலான கடல் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர கடலோர பாதுகாப்பு போலீசாரும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தநிலையில் ராமேசுவரம் கடல் பகுதியின் பாதுகாப்பை ஆய்வு செய்ய நேற்று தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தின் கூடுதல் டி.ஜி.பி. வன்னியபெருமாள் வந்தார். அவர் கடலோர போலீஸ் துணை சூப்பிரண்டு இளங்கோவிடம் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது, இன்ஸ்பெக்டர் பெலிக்ஸ் சுரேஷ், சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

பின்னர் ஏ.டி.ஜி.பி. வன்னிய பெருமாள் நிருபர்களிடம் கூறியதாவது:-

இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கடல் மற்றும் கடற்கரை பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படையினருடன் ஒருங்கிணைந்து கடலோர போலீசாரும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக கடல் பகுதி வழியாக இலங்கையில் இருந்து சந்தேகப்படும் படியான நபர்கள் யாரும் செல்லவில்லை. கடலோர போலீசில் முதல் முறையாக தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் கடலோர போலீஸ் சிறப்பு நுண்ணறிவு குழு உருவாக்கப்பட்டு சிறப்பாக செயல்படடு வருகின்றது. மீனவர்கள், இலங்கை அகதிகள், வெளிநாட்டவர்கள் உள்பட அனைத்து விஷயங்களையும் கடலோர போலீசின் நுண்ணறிவு குழு உன்னிப்பாக கவனித்து உடனுக்குடன் தகவல்களை தெரிவித்து வருகிறது.

தமிழக கடலோர போலீஸ் நிலையத்தில் பழுதான நிலையில் உள்ள ரோந்து படகுகள் அனைத்தும் ரூ.3½ கோடியில் புனரமைக்கப்பட்டு வருகின்றன. கடலோர போலீசாரின் ரோந்து பணிக்காக மேலும் ரூ.4½ கோடியில் 20 மீட்டர் நிளத்தில் 19 அதிவேக படகுகள் ரோந்து பணிக்காக வாங்கப்பட உள்ளன. கடலோர போலீசாரின் ரோந்து படகுகளை நிறுத்த வசதியாக தமிழகத்தில் 9 இடங்களில் தலா ரூ.15 லட்சத்தில் படகு நிறுத்தும் தளம் கட்டப்பட உள்ளன.

ராமேசுவரம் கடல் வழியாக இலங்கைக்கு கடல் அட்டை கடத்தப்படுவது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. சென்னை மெரினா கடலில் குளித்தபோது ஆபத்தில் சிக்கிய பல பேரை கடலோர போலீசார் மீட்டுள்ளனர். இதற்காக கடலோர போலீசாருக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. மீனவர்களிடமும் எந்த ஒரு சம்பவமாக இருந்தாலும் உடனடியாக 1093 எண்ணுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story