மதுரையில் லேப் டெக்னீசியன் பலியான சம்பவத்தில் திருப்பம், பணத்தை திருட சாலையில் கற்களை போட்டு விபத்தை ஏற்படுத்தியவர் சிக்கினார்


மதுரையில் லேப் டெக்னீசியன் பலியான சம்பவத்தில் திருப்பம், பணத்தை திருட சாலையில் கற்களை போட்டு விபத்தை ஏற்படுத்தியவர் சிக்கினார்
x
தினத்தந்தி 25 April 2019 11:00 PM GMT (Updated: 25 April 2019 11:18 PM GMT)

மதுரை திருநகரில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து லேப் டெக்னீசியன் பலியான சம்பவத்தில் திருப்பமாக, பணத்தை திருட சாலையில் கற்களை போட்டு விபத்தை ஏற்படுத்தி அவரது உயிரை பறித்த வாலிபரை கொலை வழக்கில் போலீசார் கைது செய்தனர்.

திருப்பரங்குன்றம்,

மதுரை திருநகர் பாண்டியன் நகரை சேர்ந்தவர் பாஸ்கரன்(வயது 55). இவர் லேப் டெக்னீசியனாக வேலை செய்து வந்தார். இவர் கடந்த 22-ந்தேதி இரவு வேலை முடிந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். திருநகர் ஜி.எஸ்.டி. ரோட்டில் அவர் வந்தபோது, மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பாஸ்கரன் இறந்தார். இதுகுறித்து மதுரை கரிமேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் சாலையில் குறுக்கே வைக்கப்பட்டிருந்த கற்களின் மீது மோட்டார் சைக்கிள் ஏறியதால் நிலைதடுமாறி பாஸ்கரன் கீழே விழுந்துள்ளார். அந்த நேரத்தில் அங்கு வந்த ஒருவர், பாஸ்கரனின் செல்போன், பணத்தை திருடி செல்வது தெரியவந்தது. அந்த நபர் சென்ற பிறகு அந்த வழியாக வந்தவர்கள் பாஸ்கரனை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

இதற்கிடையே பணம், செல்போனை திருடி சென்ற நபர் வேண்டுமென்றே சாலையில் கற்களை போட்டு விபத்தை ஏற்படுத்தி உள்ளாரா? என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. எனவே பணம், செல்போனை திருடி சென்ற நபரை போலீசார் தேடி வந்தனர்.

இது தொடர்பான விசாரணையில், திருட்டில் ஈடுபட்டது மதுரை தனக்கன்குளம், திருவள்ளுவர்நகரை சேர்ந்த ராஜா (28) என்பது தெரியவந்தது. மேலும் அவர் சாலையில் கற்களை வைத்து விபத்தை ஏற்படுத்தி, விபத்தில் சிக்கும் நபர்களிடம் இருந்து செல்போன், பணத்தை திருட திட்டமிட்டு இருந்ததும், அதன்படியே சம்பவத்தன்று திருநகர் ஜி.எஸ்.டி. ரோட்டில் கற்களை போட்டுள்ளதும் தெரியவந்தது. அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த பாஸ்கரன், கற்கள் மீது மோதிய தடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர், பரிதாபமாக இறந்துவிட்டார்.

இதையடுத்து பிடிபட்ட ராஜா மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

Next Story