குடும்ப தகராறில் 3 வயது குழந்தையுடன் தந்தை ரெயில் முன் பாய்ந்து தற்கொலை முயற்சி - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
சிவகங்கை அருகே குடும்பத் தகராறில் 3 வயது குழந்தையுடன் ரெயில் முன் பாய்ந்து தந்தை தற்கொலைக்கு முயன்றார்.
சிவகங்கை,
சிவகங்கையை அடுத்துள்ள புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகைச்சாமி (வயது 35). இவருடைய மனைவி உதயா. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட குடும்ப தகராறில் உதயா தனது குழந்தைகளுடன் சிவகங்கை எம்.ஜி.ஆர். நகரில் உள்ள அவரது தந்தை வீட்டிற்கு சென்று விட்டாராம்.
சம்பவத்தன்று கார்த்திகைசாமி தன் மனைவியை சமாதானம் செய்து அழைத்துச் செல்ல எம்.ஜி.ஆர். நகருக்கு வந்துள்ளார். அப்போது அங்கு கணவன், மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் விரக்தி அடைந்த கார்த்திகைச்சாமி தனது 3 வயது குழந்தையை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள தண்டவாள பகுதிக்குச் சென்றார். அப்போது அங்கு வந்த ரெயில் முன்பு தனது குழந்தையுடன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார். இதில் இருவரும் படுகாயத்துடன் உயிர் தப்பினர். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக 2 பேரையும் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக மானாமதுரை ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story