திருக்கனூர் அருகே நடந்த லாரி டிரைவர் கொலையில் சிறுவன் உள்பட 5 பேர் கைது


திருக்கனூர் அருகே நடந்த லாரி டிரைவர் கொலையில் சிறுவன் உள்பட 5 பேர் கைது
x
தினத்தந்தி 25 April 2019 11:56 PM GMT (Updated: 25 April 2019 11:56 PM GMT)

திருக்கனூர் அருகே லாரி டிரைவர் கொலையில் சிறுவன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருக்கனூர்,

திருக்கனூர் அருகே சோரப்பட்டு காலனி சுடுகாடு அருகே கடந்த 2 நாட்களுக்கு முன்பு வாலிபர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். தகவல் அறிந்த திருக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை செய்யப்பட்ட வாலிபர் குறித்து விசாரித்ததில், திருக்கனூர் அருகே தமிழக பகுதியான சேஷாங்கனூர் கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் அர்ச்சுனன் (வயது 28) என்பது தெரியவந்தது. இவருக்கு ஜோதி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். திருமணத்துக்கு பின் சன்னியாசிக்குப்பம் காலனியில் அர்ச்சுனன் வசித்து வந்தார் என்பது தெரியவந்தது.

இந்த கொலை குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கடைசியாக அர்ச்சுனனை அவரது நண்பர் பாபு மற்றும் 17 வயது சிறுவன் அழைத்துச் சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களை பிடித்து விசாரித்ததில் சோரப்பட்டு காலனியை சேர்ந்த தமிழ்வாணன், சுந்தரவேல், அருளரசன், புதுவை கண்டாக்டர் தோட்டத்தை சேர்ந்த அய்யப்பன் ஆகியோர் அர்ச்சுனனை கொலை செய்தது அம்பலமானது. இதையடுத்து சிறுவன் உள்பட 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கொலை நடந்தது ஏன் என்பது குறித்து போலீசார் கூறியதாவது:-
சோரப்பட்டு காலனியை சேர்ந்த சாத்தராக் (35) என்பவருக்கும், தமிழ்வாணனுக்கும் முன்விரோதம் இருந்துவந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட ஒரு பிரச்சினையின்போது சாத்தராக் தம்பி அபேத்தை தமிழ்வாணன் தாக்கினார். இதனால் ஆத்திரமடைந்த சாத்தராக் தமிழ்வாணனை கொலை செய்ய திட்டமிட்டார். இதற்காக தனது நண்பரான லாரி டிரைவர் அர்ச்சுனனின் உதவியை நாடினார்.

இதற்கு அர்ச்சுனனும் சம்மதம் தெரிவித்துள்ளார். இதுபற்றிய விவரம் தெரியவந்ததால் சாத்தராக் அல்லது அர்ச்சுனனை கொலை செய்ய தமிழ்வாணன் முடிவு செய்தார். இதுபற்றி தனது நண்பரும், அர்ச்சுனனின் நண்பருமான சேஷாங்கனூரை சேர்ந்த பாபுவிடம் கூறினார். இதற்கு உதவுவதாக அவர் தெரிவித்தார்.

இவர்களது திட்டத்தின்படி 17 வயது சிறுவனும், தமிழ்வாணனும் சேர்ந்து அர்ச்சுனனை அழைத்துக் கொண்டு டி.எஸ்.பாளையம் - சோரப்பட்டு சாலையில் உள்ள சேஷாங்கனூர் ஏரிக்கரைக்கு வந்தனர். அங்கு ஏற்கனவே தமிழ்வாணன், சுந்தரவேல், அருளரசன், அய்யப்பன் ஆகியோர் மதுகுடித்துக்கொண்டு இருந்தனர்.

பாபு கேட்டுக் கொண்டதையடுத்து அவர்களுடன் சேர்ந்து அர்ச்சுனன் மது குடித்தார். அப்போது ஏற்பட்ட தகராறை தொடர்ந்து அர்ச்சுனனை தமிழ்வாணன் மற்றும் அவரது கூட்டாளிகள் உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்து கீழே விழுந்த அர்ச்சுனனின் கழுத்தை கத்தியால் அறுத்ததில் அவர் துடிதுடித்து மயங்கினார்.

உடனே அர்ச்சுனன் இறந்து போனதாக கருதி அவரை தீவைத்து எரிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சோரப்பட்டு காலனி சுடுகாட்டுக்கு தமிழ்வாணனும் அவரது கூட்டாளிகளும் தூக்கிக் கொண்டு வந்தனர். சுடுகாட்டுக்கு வந்தபோது, அர்ச்சுனன் உடலில் உயிர் இருந்தது. இதையடுத்து அவரது கழுத்தை காலால் மிதித்து கொலை செய்து விட்டு உடலை அந்த இடத்தில் வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

லாரி டிரைவர் அர்ச்சுனன் கொலையில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த இன்ஸ்பெக்டர் ராஜ் குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் வேலு, குமார் ஆகியோரை போலீஸ் சூப்பிரண்டு ரங்க நாதன் பாராட்டினார்.

Next Story