கொத்தனார் கொலையில் 3 பேர் கைது


கொத்தனார் கொலையில் 3 பேர் கைது
x
தினத்தந்தி 26 April 2019 5:30 AM IST (Updated: 26 April 2019 5:30 AM IST)
t-max-icont-min-icon

கொத்தனாரை கொலை செய்து கழிவுநீர் வாய்க்காலில் வீசிய சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரி,

புதுவை வைத்திக்குப்பம் பாப்பம்மாள் கோவில் வீதியில் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் வாலிபர் ஒருவர் கடந்த 22-ந்தேதி பிணமாக கிடந்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த முத்தியால்பேட்டை போலீசார் அவர் யார்? என்று விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் அந்த நபர் புதுவையை அடுத்த தமிழக பகுதியான குயிலாப்பாளையம் குளத்து தெருவை சேர்ந்த ராமதாஸ் மகன் பரத் (25) என்பது தெரியவந்தது. பிரேத பரிசோதனையில் கொத்தனாராகிய அவர் அடித்து கொலை செய்யப்பட்டதும் தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் உத்தரவின்பேரில் இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு முத்தியால்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஹேமச்சந்திரன், கார்த்திகேயன், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

இந்த விசாரணையில் புதுவை முத்தியால்பேட்டை அங்காளம்மன் நகரை சேர்ந்த ஏழுமலை (வயது 21), சோலைநகர் கண்ணதாசன் வீதியை சேர்ந்த அருண் என்ற அருண்குமார் (19), வைத்திக்குப்பம் செட்டியார் வீதியை சேர்ந்த மனோஜ்குமார் (24) ஆகியோர் இந்த கொலையை செய்திருப்பது தெரியவந்தது.

கடந்த 19-ந்தேதி அன்று பரத் தனது நண்பர் ஒருவருடன் புதுவைக்கு சினிமா பார்க்க வந்துள்ளார். அப்போது மது அருந்தியிருந்த நிலையில் நண்பரை விட்டு பரத் பிரிந்து சென்றுள்ளார். அன்றைய தினம் இரவு கருவடிக்குப்பம் சாராயக்கடையில் சாராயம் குடித்துள்ளார்.

அப்போது அங்கு சாராயம் குடித்துக்கொண்டிருந்த ஏழுமலை, அருண், மனோஜ் குமார் ஆகியோர் அவரிடம் பணம் இருப்பதாக நினைத்து அதை பறிக்க திட்டமிட்டுள்ளனர். அவரிடம் மது வாங்கி தருவதாக கூறி மோட்டார்சைக்கிளில் வைத்திக்குப்பம் பகுதிக்கு அழைத்து சென்றனர்.

அங்கு வைத்து பரத்திடம் பணம் உள்ளதா? என்று சோதித்து பார்த்துள்ளனர். ஆனால் பணம் எதுவும் இல்லாததால் ஆத்திரமடைந்த அவர்கள் பரத்தை பாட்டில் மற்றும் கல்லால் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் செத்தார். பின்னர் கொலையை மறைக்கும்விதமாக பிணத்தை கழிவுநீர் வாய்க்காலில் தூக்கிப்போட்டுவிட்டு சென்றுள்ளனர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 மோட்டார்சைக்கிள்கள், 2 செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story