ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வாக்குப்பதிவு எந்திரங்களுக்கான பாதுகாப்பு குறித்து கலெக்டர் ஆய்வு


ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வாக்குப்பதிவு எந்திரங்களுக்கான பாதுகாப்பு குறித்து கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 26 April 2019 11:00 PM GMT (Updated: 26 April 2019 3:49 PM GMT)

ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் பாதுகாப்பு குறித்து கலெக்டர் ராமன் ஆய்வு செய்தார்.

வேலூர், 

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் மற்றும் சோளிங்கர் சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் எண்ணப்படுகின்றன. இதனால் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருத்தணி, அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு மற்றும் காட்பாடி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, கண்காணிப்பு கேமராக்கள் மூலமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ராமன், ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தார்.

அப்போது ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளை கண்காணிக்க வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் இயங்குவதையும், கேமராக்கள் 24 மணி நேரமும் இயங்குவதையும், கண்காணித்திடும் கட்டுப்பாட்டு அறைகளில் முறையாக பதிவு செய்யப்படுகிறதா? என்பதையும் அவர் ஆய்வு செய்தார்.

மேலும் மத்திய பாதுகாப்புப்படை வீரர்களின் கண்காணிப்பு பணிகள் குறித்து பாதுகாப்புப்படை வீரர்களிடம் கேட்டறிந்தார். வேட்பாளர்களின் முகவர்கள் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் பாதுகாப்பை கண்காணித்திட வருகை புரிந்தார்களா? என்பதை பதிவேட்டினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 3 அடுக்கு பாதுகாப்பு குறித்தும் கேட்டறிந்தார்.

அப்போது அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான பார்த்திபன், ராணிப்பேட்டை உதவி கலெக்டர் இளம்பகவத், வாலாஜா தாசில்தார் பூமா ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story