குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு
அரக்கோணம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அரக்கோணம்,
அரக்கோணம் அருகே உள்ள மின்னல், இந்திரா நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் சரியாக வரவில்லை. இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த 50–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலிக்குடங்களுடன் மின்னல் – அன்வர்திகான்பேட்டை சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் அரக்கோணம் தாசில்தார் ஜெயக்குமார், போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ரபேல்லூயிஸ் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பொதுமக்கள் கூறுகையில், ‘எங்கள் பகுதிக்கு கடந்த சில நாட்களாக குடிநீர் சரியாக வரவில்லை. இதனால் நாங்கள் நீண்ட தூரம் நடந்து சென்று குடிநீர் எடுத்துவர வேண்டிய நிலை இருந்து வருகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தாலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே போர்க்கால அடிப்படையில் எங்கள் பகுதிகளில் குடிநீர் தங்கு, தடையில்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
இதனையடுத்து அதிகாரிகள் கூறுகையில், ‘குடிநீர் வரும் குழாய்களில் பழுது ஏற்பட்டதால் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. தற்போது குழாய்கள் பழுது பார்க்கும் பணிகள் நடந்து வருகிறது. அதன் பின்னர் சீரான குடிநீர் வழங்கப்படும். முதற்கட்டமாக தற்காலிகமாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது’ என்றார்.
அதைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் மின்னல் – அன்வர்திகான்பேட்டை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.