மானாமதுரை வைகை ஆற்றில் தொடரும் மணல் கொள்ளை - நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
மானாமதுரை வைகை ஆற்றில் தொடரும் மணல் கொள்ளையை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மானாமதுரை,
மானாமதுரை பகுதியையொட்டி கீழப்பசலை, வேதியரேந்தல், கரிசல்குளம், கல்குறிச்சி, கால்பிரிவு, இடைக்காட்டூர், மழவராயனேந்தல் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் உள்ள வைகை ஆற்றில் தினமும் இரவு நேரங்களில் மாட்டுவண்டிகளில் மணல் அள்ளப்பட்டு ஓரிடத்தில் குவித்து வைக்கப்படுகிறது. பகல் நேரங்களிலும் சிலர் மணலை தலைச்சுமையாக அள்ளி சேகரித்து வருகின்றனர். அதை நூதனமாக கடத்தி சென்று விற்பதாக அந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கூறினர். மேலும் அவர்கள் கூறியதாவது: சேகரிக்கப்படும் மணலை லாரிகளில் பரப்பி அதன் மீது செங்கல், சித்துக்கல், ஓடு ஆகியவைகளை அடுக்கி நூதன முறையில் மணல் கடத்திலில் ஒரு கும்பல் ஈடுபட்டு வருகிறது.
இதுதவிர இன்னும் சில கும்பல் பட்டப்பகலில் லாரிகளில் மணலை அள்ளி, மதுரை, சிவகங்கை, பரமக்குடி, தேவகோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்கின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் செய்தும் சம்பந்தப்பட்ட வருவாய்துறையினர், கனிம வளத்துறையினர் மற்றும் போலீசார் கண்டுகொள்வதில்லை. போலீசார் சிலர் லாரிகளை பிடித்தாலும், சிறிது நேரத்தில் அந்த லாரிகள் உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் விடுவிக்கப்படுகின்றன.
தற்போது மானாமதுரை வைகையாற்று பகுதியில் மணல் கொள்ளை அதிக அளவில் நடைபெற்று வருகிறது. தினமும் மாலை 6 மணியில் இருந்து மறுநாள் அதிகாலை 5 மணி வரை மணல் திருடப்படுகிறது. நீதிமன்றம் சமீபத்தில் மணல் திருட்டில் ஈடுபடும் வாகனங்களை விடுவிக்கக் கூடாது என உத்தரவிட்டாலும், இன்று வரை அது நடைமுறை படுத்தவில்லை.
இதனால் வைகையாற்று பகுதியில் ஆங்காங்கே பெரிய பள்ளம் உருவாகி வருகிறது. மேலும் தொடர் மணல் திருட்டால் வைகை ஆற்றில் மணல் மறைந்து, கட்டாந்தரையாக காணப்படுகிறது. மழை காலங்களிலும், திருவிழா நாட்களிலும் ஆற்றில் தண்ணீர் வரும் போது இந்த பள்ளங்கள் தண்ணீரால் மறைக்கப்படுகிறது. அதில் சிக்கி பல உயிரிழப்பு ஏற்படுகிறது. விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும் அளவிற்கு இந்த மணல் கொள்ளை நடைபெறுவதால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மணல் கடத்துபவர்கள் மீது எவ்வித பாராபட்சமின்றி நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story