வெயிலும்.. முட்டையும்..


வெயிலும்.. முட்டையும்..
x
தினத்தந்தி 28 April 2019 5:30 AM GMT (Updated: 27 April 2019 10:18 AM GMT)

எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு வைட்டமின் டி சத்து இன்றியமையாதது.

 சளி, இருமல், மன அழுத்தம், வீக்கம் போன்றவைகளில் இருந்து உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதிலும் வைட்டமின் டி முக்கிய பங்குவகிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

சூரிய ஒளிக்கதிர்கள் உடலில் படுவதன் மூலமும் போதுமான அளவு வைட்டமின் டியை பெறலாம். ஆனால் போதுமான அளவு சூரிய ஒளி உடலில் படவில்லை என்றால் வைட்டமின்கள் உடலில் உறிஞ்சப்படுவதில் பிரச்சினைகள் ஏற்பட்டு வைட்டமின் டி பற்றாக்குறை ஏற்படும். சில உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதன் மூலமும் வைட்டமின் டி சத்தினை பெறலாம்.

கொழுப்பு நிறைந்த சாலமன், டூனா போன்ற மீன் வகைகளில் வைட்டமின் டி அதிகம் நிறைந்திருக்கிறது. இத்தகைய மீன் வகைகளை சாப்பிடுவது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நலம் சேர்க்கும். ஒரு சில வகை காளான்களில் புற ஊதாக்கதிர்களின் வழியாக வைட்டமின் டி உற்பத்தியாகும். எல்லா காளான்களிலும் இத்தகைய வைட்டமின்கள் இருக்காது. அதனால் கடைகளில் காளான்களை வாங்கும்போது அவற்றுள் இத்தகைய வைட்டமின் டி இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும்.

செரிவூட்டப்பட்ட பாலில் வைட்டமின் டி அதிகம் இருக்கும். அதேவேளையில் ஐஸ்கிரீம், பாலாடைக்கட்டி போன்றவற்றில் வைட்டமின் டி இருக்காது. ஆரஞ்சு ஜூஸும் பருகி வரலாம். அதிலும் வைட்டமின் டி உள்ளடங்கி இருக்கிறது. முட்டையின் மஞ்சள் கருவிலும் வைட்டமின் டி உள்ளது. அதேவேளையில் ஒரு முட்டையில் 200 மில்லி கிராம் கொழுப்பு நிரம்பி இருக்கிறது. அதனால் ஒரு நாளைக்கு இரண்டு முட்டைகளுக்கு மேல் சாப்பிடக்கூடாது.

Next Story