இலங்கை குண்டு வெடிப்பு எதிரொலி: சேலம் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை


இலங்கை குண்டு வெடிப்பு எதிரொலி: சேலம் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை
x
தினத்தந்தி 28 April 2019 4:00 AM IST (Updated: 28 April 2019 12:40 AM IST)
t-max-icont-min-icon

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலியாக சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் நேற்று மோப்ப நாயுடன் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

சூரமங்கலம்,

இலங்கையில் கடந்த 21-ந் தேதி ஈஸ்டர் பண்டிகையின்போது, கிறிஸ்தவ தேவாலயங்கள், ஓட்டல்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் 300-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதையொட்டி இந்தியா முழுவதும் பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்டு முக்கிய இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். சென்னையில் நேற்று முன்தினம் ரெயில் நிலையங்களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில், சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் நேற்று காலை ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு போலீசார் ஆகியோர் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவர்கள் கோவையில் இருந்து சென்னை சென்ற இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி ஒவ்வொரு பெட்டியாக மோப்ப நாயுடன் சென்று சோதனை செய்தனர். மேலும், பயணிகள் வைத்திருந்த உடைமைகளை மெட்டல் டிடெக்டர் மூலமாக பரிசோதனை செய்யப்பட்டது. இதன் காரணமாக சுமார் 15 நிமிடம் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் தாமதமாக புறப்பட்டு சென்றது.

சேலம் ரெயில்வே போலீஸ் துணை சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் இளவரசி மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் அரவிந்த்குமார் ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். ரெயிலில் உள்ள குளிர்சாதன பெட்டி, சாதாரண இருக்கை பெட்டிகளில் கைப்பை மற்றும் வெடிகுண்டு பார்சல் ஏதேனும் உள்ளதா? என சோதனை செய்தனர். ஆனால் இந்த சோதனையில் எந்த பொருளும் சிக்கவில்லை.

இதையொட்டி ஜங்ஷன் ரெயில் நிலையம் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். சேலம் வழியாக சென்ற அனைத்து ரெயில்களிலும் நேற்று போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

Next Story