சமூக வலைத்தளத்தில் அவதூறு வீடியோ வெளியிட்ட மேலும் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் போலீசார் நடவடிக்கை


சமூக வலைத்தளத்தில் அவதூறு வீடியோ வெளியிட்ட மேலும் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் போலீசார் நடவடிக்கை
x
தினத்தந்தி 28 April 2019 4:30 AM IST (Updated: 28 April 2019 12:45 AM IST)
t-max-icont-min-icon

சமூக வலைத்தளத்தில் அவதூறு வீடியோ வெளியிட்ட மேலும் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

கடலூர்,

சமூக வலைத்தளத்தில் ஒரு குறிப்பிட்ட சாதியை பற்றி அவதூறாக பேசி வீடியோ வெளியிட்ட விருத்தாசலம் மணலூரை சேர்ந்த சிவக்குமார் என்பவரை விருத்தாசலம் போலீசார் சமீபத்தில் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். அதேபோல் சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்ட மேலும் 2 பேர் மீது குண்டர் பாய்ந்தது.

இது பற்றிய விவரம் வருமாறு:–

காட்டுமன்னார்கோவில் அருகே கண்டமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 45). பா.ம.க. நகர செயலாளர். இவர் தனது சாதியை பற்றி அவதூறாக ஒருவர் பேசி வீடியோ வெளியிட்டுள்ளதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காட்டுமன்னார்கோவில் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் ஈச்சம்பூண்டி கிராமத்தை சேர்ந்த கொளஞ்சி மகன் அருள்ராஜ் (28) என்று தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, மத்திய சிறையில் அடைத்தனர்.

சேத்தியாத்தோப்பு அருகே தலைகுளத்தை சேர்ந்தவர் சங்கர் (46). இவர் பா.ம.க. மத்திய ஒன்றிய செயலாளராக உள்ளார். இவர் கடந்த 23–ந்தேதி அன்று சேத்தியாத்தோப்பு போலீசில், வன்னியர் சமுதாயத்தை பற்றி ஒருவர் அவதூறாக பேசி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அதன்பேரில் போலீசார் விசாரித்த போது, அவர் மிராளூர் காலனி பொன்னம்பலம் (58) என்று தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து இவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் அருள்ராஜ், பொன்னம்பலம் ஆகிய 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் அன்புசெல்வன் உத்தரவிட்டார்.

அதன்பேரில் காட்டுமன்னார்கோவில் போலீசார் அருள்ராஜையும், சேத்தியாத்தோப்பு போலீசார் பொன்னம்பலத்தையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து, அதற்கான உத்தரவு நகல்களை கடலூர் மத்திய சிறையில் இருக்கும் அவர்களிடம் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கினர்.


Next Story