விழுப்புரம் மாவட்டத்தில் ‘பானி’ புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்; போலீஸ் சூப்பிரண்டு பார்வையிட்டார்


விழுப்புரம் மாவட்டத்தில் ‘பானி’ புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்; போலீஸ் சூப்பிரண்டு பார்வையிட்டார்
x
தினத்தந்தி 27 April 2019 10:15 PM GMT (Updated: 27 April 2019 7:25 PM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் ‘பானி’ புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதனை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பார்வையிட்டார்.

விழுப்புரம்,

வங்க கடலில் உருவாகியுள்ள பானி புயலை எதிர்கொள்வதற்காக விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாவட்டத்தின் கடலோர பகுதிகளான பொம்மையார்பாளையம், சின்னமுதலியார்சாவடி, பெரியமுதலியார்சாவடி, கோட்டக்குப்பம், பனிச்சமேடு, தந்திராயன்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 170 போலீசார் அடங்கிய மீட்பு குழுவினர் முகாமிட்டு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளை நேற்று மாலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அங்கு வைக்கப்பட்டுள்ள பைபர் படகுகள், நாட்டு படகுகள், ஒலிபெருக்கிகள், தொலைபேசிகள், பொக்லைன் எந்திரங்கள், அதிக திறன் வாய்ந்த நீர் ஏற்றும் மோட்டார் எந்திரங்கள், வெள்ளநீர் உறிஞ்சும் எந்திரம், மழைகோட், மரம் அறுக்கும் எந்திரம், கயிறு, கத்தி, கோடாரி, மண்வெட்டி உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு உபகரணங்களை பார்வையிட்ட அவர், மீட்பு குழுவினர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பயிற்சிகள் குறித்து கேட்டறிந்தார்.

அதனை தொடர்ந்து, எந்த நேரத்திலும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் போலீசாருக்கு அவர் அறிவுறுத்தினார்.

அதன் பின்னர் மாவட்ட காவல்துறை மூலம் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு முன்னெச்சரிக்கை குறித்து மீனவ மக்களிடமும் கேட்டறிந்தார். அப்போது அரசின் மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய்தங்கம், இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் பலர் உடனிருந்தனர்.

Next Story