திருச்சி உய்யகொண்டான் வாய்க்கால் கரையை ரூ.17 கோடியில் சுற்றுலா மையம் போல் உருவாக்கும் பணி தீவிரம்


திருச்சி உய்யகொண்டான் வாய்க்கால் கரையை ரூ.17 கோடியில் சுற்றுலா மையம் போல் உருவாக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 27 April 2019 10:45 PM GMT (Updated: 27 April 2019 8:01 PM GMT)

திருச்சி உய்யகொண்டான் வாய்க்கால் கரையை ரூ.17½ கோடியில் சுற்றுலா மையம் போல் உருவாக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதில் 3 இடங்களில் விளையாட்டு சாதனங்களுடன் நவீன பூங்கா அமைக்கப்படுகிறது. 2½ கிலோ மீட்டர் நீளத்திற்கு மேம்படுத்தப்பட்ட நடைபயிற்சி தளம் அமைக்கப்பட்டு வருகிறது.

திருச்சி,

மத்திய அரசின் ‘ஸ்மார்ட் சிட்டி’ எனப்படும் சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் திருச்சி நகரில் பல்வேறு பணிகள் நடைபெற உள்ளன. மலைக்கோட்டையை மையமாக வைத்து 7 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மேம்படுத்துவது, காந்திமார்க்கெட்டில் நவீன வணிக வளாகம் கட்டுவது, சத்திரம் பஸ் நிலையத்தில் மூன்றடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைப்பது, தெப்பக்குளம் பகுதியில் திருச்சி நகரின் கலை பண்பாட்டை விளக்கும் வகையில் வண்ண நீரூற்று அமைப்பது ஒரு திட்டமாகும்.

இது தவிர தில்லைநகரில் ரூ.15 கோடியில் வணிக வளாகம் கட்டுவது, ராஜ ராஜசோழனால் வெட்டப்பட்ட திருச்சி உய்ய கொண்டான் வாய்க்கால் கரையில் தொட்டிப்பாலம் (பழைய ஆறு கண் பாலம்) முதல் கோர்ட்டு எம்.ஜி.ஆர். சிலை அமைந்து உள்ள செட்டிப்பாலம் வரை ரூ.17 கோடியே 56 லட்சத்தில் மேம்பாடு செய்வது ஆகிய திட்டங்களும் உள்ளன. இதில் உய்ய கொண்டான் வாய்க்கால் கரை மேம்பாடு செய்யும் பணி கடந்த 2 மாதங்களுக்கு முன் தொடங்கியது. தற்போது இந்த பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

தொட்டிப்பாலம் முதல் செட்டிப்பாலம் வரை உய்ய கொண்டான் வாய்க்காலின் மொத்த நீளம் சுமார் 2½ கிலோ மீட்டர் ஆகும். 2½ கிலோ மீட்டர் நீளத்திற்கும் தற்போது உள்ள சாலையை 15 அடி அளவிற்கு அகலப்படுத்தி அதனை மேம்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணி முடிவடைந்த உடன் சாலைக்கும், வாய்க்காலுக்கும் இடைப்பட்ட பகுதியில் நடைபயிற்சி தளம் ‘பேவர் பிளாக்’ கற்களால் அமைக்கப்பட உள்ளது.

மேலும் வாய்க்கால் கரையில் 3 இடங்களில் நவீன வசதிகளுடன் கூடிய பூங்கா அமைக்கப்பட இருக்கிறது. இதில் ஒரு பூங்காவிற்கு அழகு மயில் பூங்கா என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த பூங்கா மயில் வடிவில் இருக்கும் என்பதாலும், அந்த பகுதியில் ஏராளமான மயில்கள் சுற்றி திரிவதால் அவை இந்த பூங்காவிற்கு வந்து தங்கி மகிழலாம் என கருதி இந்த பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இரண்டாவது பூங்கா இதே பகுதியில் இதன் அருகிலும், மூன்றாவது பூங்கா வாய்க்காலின் மறு கரையிலும் கலெக்டர் அலுவலகத்திற்கு செல்லும் சாலையில் அமைக்கப்பட்டு வருகிறது. வாய்க்காலின் ஒரு கரையில் இருந்து மறு கரைக்கு நடந்து செல்வதற்கு வசதியாக வாய்க்காலின் குறுக்கே ஒரு நடைபாலமும் கட்டப்பட உள்ளது.

இந்த 3 பூங்காக்களிலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பொழுது போக்குவதற்கான 4 இருக்கைகள், 3 இருக்கைகள், 2 இருக்கைகள் கொண்ட ஊஞ்சல்கள், ஒருவர் அமர்வதற்கான ஊஞ்சல்கள் உள்பட பல விளையாட்டு சாதனங்கள் இடம் பெற உள்ளன. இது தவிர ‘கிரானைட்’ கற்களால் ஆன இருக்கைகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிப்பறை வசதிகளும் செய்யப்பட உள்ளன. திறந்த வெளி உடற்பயிற்சி சாதனங்களும் இடம்பெற உள்ளது. கண்காணிப்பு கேமராக்கள், பூங்கா நுழைவு வாயிலில் அலங்கார வளைவுடன் கூடிய கேட், மின் விளக்கு வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளன.

பணி தொடங்கப்பட்ட 2 ஆண்டு காலத்திற்குள் முடிக்கப்பட வேண்டும் என திருச்சி மாநகராட்சி சார்பில் கால நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே இந்த பகுதியில் வனத்துறை சார்பில் நடப்பட்ட தேக்கு உள்ளிட்ட பல மரங்கள் வானளாவ வளர்ந்து உள்ளன. அவற்றுடன் நவீன பூங்காக்களும், நடைபயிற்சி தள வசதியுடன் உருவாக்கப்பட்டு வருவதால் உய்ய கொண்டான் வாய்க்கால் கரை சுற்றுலா மையம் போல் மாறும் என்பதில் ஐயமில்லை. 

Next Story