போக்குவரத்து நெரிசலை குறைக்க புதுவையில் ஆக்கிரமிப்புகள் அகற்ற கலெக்டர் உத்தரவு
புதுவையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
புதுவை மாவட்ட சாலை பாதுகாப்பு குழுவின் ஆலோசனை கூட்டம் கடந்த 23–ந் தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில், சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளின் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு அதிகமாக இருப்பதாகவும் எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
போக்குவரத்து நெரிசலை குறைக்க சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனை பொதுப்பணித்துறை, காவல்துறை, மின்துறை, நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் ஒன்றிணைந்து மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பணியை அடுத்த மாதம்(மே) 22–ந் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்பு அகற்றம் செய்யும் இடங்களின் விவரம் வருமாறு:–
வருகிற 29–ந் தேதி லெனின்வீதி, 30–ந் தேதி இந்திராகாந்தி சிலை முதல் மூலக்குளம் வரை. அடுத்த மாதம்(மே) 2–ந் தேதி புஸ்சி வீதியில் அண்ணாசாலை முதல் கடற்கரை சாலை வரை. 3–ந் தேதி ராஜீவ்காந்தி சிலை முதல் பெரியார் சிலை வரை. 6–ந் தேதி ராஜீவ்காந்தி சிலை முதல் மேட்டுப்பாளையம் வரை. 7–ந் தேதி அண்ணாசிலை முதல் அஜந்தா சந்திப்பு வரை. 9–ந் தேதி ஜிப்மர் முதல் ராஜீவ்காந்தி சிலை வரை.
13–ந் தேதி திருவள்ளுவர் சாலையில் சுப்பையா சிலை முதல் பெரியார் சிலை வரை. 14–ந் தேதி விமான நிலையம் செல்லும் சாலையில் லதா ஸ்டீல் ஹவுஸ் முதல் என்.சி.சி. தலைமை அலுவலகம் வரை. 17–ந் தேதி இந்திராகாந்தி சிலை முதல் சுப்பையா சிலை வரை. 20–ந் தேதி வள்ளலார் சாலையில் வெங்கடேஸ்வரா நகர் முதல் சாரம் அவ்வை திடல் வரை. 21–ந் தேதி காந்திவீதியில் அஜந்தா சந்திப்பு முதல் முத்தியால்பேட்டை வரை.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.