கொலையான பெண்ணின் புகைப்படத்துடன் 4 மொழிகளில் துண்டுபிரசுரங்கள் அச்சடித்து போலீஸ் வினியோகம்


கொலையான பெண்ணின் புகைப்படத்துடன் 4 மொழிகளில் துண்டுபிரசுரங்கள் அச்சடித்து போலீஸ் வினியோகம்
x
தினத்தந்தி 28 April 2019 3:30 AM IST (Updated: 28 April 2019 2:19 AM IST)
t-max-icont-min-icon

சூளகிரி அருகே கொலையான பெண்ணின் புகைப்படத்துடன் 4 மொழிகளில் துண்டுபிரசுரங்கள் அச்சடித்து போலீசார் வினியோகம் செய்து வருகிறார்கள். மேலும் கர்நாடகா, ஆந்திர மாநிலங்களிலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே மேலுமலையிலிருந்து பி.ஜி.துர்க்கம் செல்லும் சாலையில் வனத்துறைக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் போதைகுட்டை என்ற இடம் உள்ளது. அங்குள்ள பாறை இடுக்கில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் கடந்த 20-ந் தேதி பிணமாக கிடந்தார்.

இது குறித்து அந்த வழியாக சென்றவர்கள் மேலுமலை கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகரனுக்கு தகவல் தெரிவித்தார், அவர் சூளகிரி போலீசாருக்கு புகார் அளித்ததன் பேரில், போலீசார் அங்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். கொலையுண்டு கிடந்த பெண், நீலநிற சுடிதார் அணிந்திருந்தார்.

4 மொழிகளில் துண்டுபிரசுரங்கள்

அந்த பெண்ணின் உடல் கிடந்த இடம் அருகே ஆங்காங்கே மது பாட்டில்கள் கிடந்தன. அவரது கையில் பிரேம் என்று பச்சை குத்தப்பட்டிருந்தது. அவரை வேறு எங்கோ கொலை செய்து உடலை அங்கு வீசி சென்றிருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். இதையடுத்து கொலையுண்ட பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே கொலையுண்ட பெண் பக்கத்து மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திராவை சேர்ந்தவராக இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். இதனால் அந்த பெண்ணின் புகைப்படத்துடன் தமிழ், ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு ஆகிய 4 மொழிகளில் துண்டுபிரசுரங்கள் அச்சடித்து போலீசார் பொதுமக்களுக்கு வினியோகம் செய்து வருகிறார்கள்.

மேலும் சுவரொட்டிகளும் அச்சிடப்பட்டு ஒட்டப்பட்டு வருகின்றன. இதே போல கர்நாடகா, ஆந்திர மாநிலங்களுக்கும் போலீசார் சென்று அங்கு காணாமல் போன பெண் குறித்த விவரங்களை சேகரித்து வருகிறார்கள்.


Next Story