கமல்ஹாசன் தத்தெடுத்த கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு காலி குடங்களுடன் பொதுமக்கள் மறியல் போக்குவரத்து பாதிப்பு


கமல்ஹாசன் தத்தெடுத்த கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு காலி குடங்களுடன் பொதுமக்கள் மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 29 April 2019 4:00 AM IST (Updated: 28 April 2019 11:34 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே கமல்ஹாசன் தத்தெடுத்த கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட அதிகத்தூர் கிராமம் இந்திரா நகர் பகுதியில் 300-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அதிகத்தூர் கிராமத்தை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தத்தெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு கடந்த ஒரு வார காலமாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. மேலும் குறைந்த மின் அழுத்தம் காரணமாக வீடுகளில் உள்ள டி.வி., பிரிட்ஜ் உள்ளிட்ட மின் சாதன பொருட்களும் சேதம் அடைந்து வந்தன.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நேற்று காலையும் அந்த பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் ஏராளமானோர் நேற்று காலை காலி குடங்களுடன் திருவள்ளூர் சாலை அதிகத்தூர் பகுதியில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்ததும் திருவள்ளூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் சுமதி சிதம்பரநான், ஊராட்சி செயலாளர் முருகன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பழுதடைந்த மின் மோட்டாரை சரி செய்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

இதனை ஏற்று பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். போராட்டம் காரணமாக அந்த பகுதியில் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story