மராட்டியத்தில் இறுதிக்கட்ட தேர்தல் 17 நாடாளுமன்ற தொகுதிகளில் ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்குகிறது மும்பையில் 40 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு


மராட்டியத்தில் இறுதிக்கட்ட தேர்தல் 17 நாடாளுமன்ற தொகுதிகளில் ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்குகிறது மும்பையில் 40 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
x
தினத்தந்தி 29 April 2019 4:22 AM IST (Updated: 29 April 2019 4:22 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் இறுதிக்கட்டமாக 17 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இன்று காலை ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதையொட்டி மும்பையில் 40 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

மும்பை,

மராட்டியத்தில் உள்ள 48 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 4 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதில் 31 தொகுதிகளில் 3 கட்டமாக தேர்தல்கள் நடந்து முடிந்து விட்டன. 4-வது மற்றும் இறுதி கட்டமாக எஞ்சியுள்ள 17 தொகுதிகளில் இன்று (திங்கட்கிழமை) வாக்குப்பதிவு நடக்கிறது.

தென்மும்பை, தென்மத்திய மும்பை, வடமும்பை, வடமத்திய மும்பை, வடமேற்கு மும்பை, வடகிழக்கு மும்பை, நந்துர்பர், துலே, தின்டோரி, நாசிக், பால்கர், பிவண்டி, கல்யாண், தானே, மாவல், சிரூர், ஷீரடி ஆகிய 17 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது.

இந்த தொகுதிகளில் நேற்று முன்தினம் மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது. 17 தொகுதிகளிலும் மொத்தம் 323 வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள். இதில் மும்பையில் உள்ள 6 தொகுதிகளில் மட்டும் 116 பேர் போட்டியிடு கின்றனர்.

இவர்களில் மும்பையில் போட்டியிடும் பா.ஜனதாவின் பூனம் மகாஜன், கோபால் ஷெட்டி, மனோஜ் கோட்டக், சிவசேனாவின் ராகுல் செவாலே, அரவிந்த் சாவந்த், கஜானன் கிரீத்திகர், காங்கிரசின் மிலிந்த் தியோரா, சஞ்சய் நிருபம், பிரியா தத், நடிகை ஊர்மிளா மடோங்கர், ஏக்நாத் கெய்க்வாட், தேசியவாத காங்கிரசின் சஞ்சய் தீனா பாட்டீல் ஆகியோர் நட்சத்திர வேட்பாளர்கள் ஆவர்.

தானேயில் சிவசேனாவின் ராஜன் விச்சாரே, தேசியவாத காங்கிரசின் ஆனந்த் பராஞ்சபே, கல்யாணில் சிவசேனாவின் ஸ்ரீகாந்த் ஷிண்டே, தேசியவாத காங்கிரசின் பாபாஜி பாட்டீல், பிவண்டியில் பா.ஜனதாவின் கபில் பாட்டீல், காங்கிரஸ் சார்பில் சுரேஷ் தாவரே, மாவல் தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் பேரன் பார்த் பவார் ஆகியோர் முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.

தேர்தல் நடைபெறும் 17 தொகுதிகளிலும் மொத்தம் 3 கோடியே 11 லட்சத்து 92 ஆயிரத்து 823 வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் 1 கோடியே 66 லட்சத்து 3 ஆயிரத்து 707 பேர் ஆண்கள். 1 கோடியே 45 லட்சத்து 59 ஆயிரத்து 698 பேர் பெண்கள். 1,418 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள்.

வாக்குப்பதிவையொட்டி தேர்தல் பணியாளர்கள் நேற்று மதியமே மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களுடன் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு போய் சேர்ந்தனர். வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம், கட்டுப்பாட்டு எந்திரம், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்திட உதவும் விவிபாட் எனப்படும் ஒப்புகைச்சீட்டு எந்திரங்களை பொருத்தி வாக்குப்பதிவுக்கு தயார் நிலையில் வைத்தனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் உள்ளிட்ட பாதுகாப்பு படையினரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்றனர். வாக்குச்சாவடி மையங்கள் அருகே அசம்பாவித சம்பவங்கள் நடந்து விடாமல் தடுக்க, வாக்காளர்களை தவிர மற்றவர்கள் உள்ளே பிரவேசிப்பதையும், தேர்தல் பணியில் அல்லாத மற்ற வாகனங்கள் வருவதையும் தடுக்கும் வகையில் வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர் எல்லை கோடுகள் வரையப்பட்டிருந்தன. மேலும் அந்த இடங்களில் தடுப்புகளும் வைக்கப்பட்டிருந்தன.

இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் எதிரொலி காரணமாக பயங்கரவாதிகளின் இலக்காக திகழும் மும்பையில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தேர்தல் அமைதியான முறையில் நடப்பதற்காக மும்பையில் உள்ள 6 தொகுதிகளும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் ஆயுதம் ஏந்திய போலீசார் நிறுத்தப்படுகின்றனர்.

மொத்தம் தேர்தல் பாதுகாப்பு பணியில் மும்பையில் 40 ஆயிரத்து 400 போலீசார், 6 ஆயிரம் ஊர்க்காவல் படையினர் ஈடுபடுகின்றனர். மேலும் பாதுகாப்பு பணியில் துணை ராணுவ படையினரும் ஈடுபடுகிறார்கள்.

தேர்தலின் போது வாக்களிப்பதற்கு வசதியாக தேர்தல் ஆணையம் மூலம் வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் சீட்டுகள் (பூத்சிலிப்) வினியோகிக்கப்பட்டன.

17 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. மாலை 6 மணி வரையிலும் வாக்காளர்கள் ஓட்டு போடலாம்.

Next Story