மகனை கொன்ற வியாபாரிக்கு ஆயுள் தண்டனை தஞ்சை கோர்ட்டு தீர்ப்பு


மகனை கொன்ற வியாபாரிக்கு ஆயுள் தண்டனை தஞ்சை கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 30 April 2019 3:45 AM IST (Updated: 30 April 2019 12:32 AM IST)
t-max-icont-min-icon

மகனை கொன்ற வியாபாரிக்கு ஆயுள் தண்டனை விதித்து தஞ்சை கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

தஞ்சாவூர்,

தஞ்சை பர்மா காலனி அண்ணா நகர் 15-வது தெருவில் வசித்து வருபவர் முகமது தாகீர்(வயது 56). மளிகை கடை நடத்தி வந்தார். இவர், பல பெண்களுடன் தொடர்பு வைத்து கொண்டு தவறான வழியில் சென்று வந்தார். மளிகை கடை மூலம் கிடைக்கும் வருமானம் மற்றும் பிற வருமானத்தையும் வீட்டிற்கு கொடுக்காமல் தவறான செயல்களுக்காக செலவு செய்தார்.

இதை அறிந்த முகமது தாகீரின் மகன்கள் மருந்து விற்பனை பிரதிநிதியான அப்துல் ரகுமான், இப்ராகிம் மற்றும் மனைவி, மகள் ஆகியோர் கண்டித்ததுடன், பல பெண்களுடன் உள்ள தொடர்பை கைவிடுமாறு வலியுறுத்தி வந்தனர். ஆனால் அதை கேட்காமல் முகமது தாகீர், மளிகை கடையை பூட்டிவிட்டு அடிக்கடி வெளியூர் சென்று வந்தார்.

இப்படியே விட்டால் சொத்துக்களை கூட விற்று செலவு செய்து விடுவார் என பயந்த மனைவி, மகன்கள் அவரை தங்களது வீட்டை விட்டு வெளியே செல்லவிடாமல் கண்காணிக்க முடிவு செய்தனர். அதன்படி சென்னைக்கு சென்ற முகமது தாகீரை வீட்டிற்கு அழைத்து வந்து வீட்டை விட்டு வெளியே போனால் கடுமையான நடவடிக்கை எடுப்போம் என கூறி வீட்டிற்குள்ளேயே வைத்து இருந்தனர்.

இந்த நிலையில் முகமது தாகீரின் மனைவியும், மகளும் ஈரோட்டிற்கு சென்றனர். அப்துல்ரகுமான், இப்ராகிம் ஆகியோர் தந்தையை கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந் தேதி அப்துல் ரகுமானுக்கும், முகமது தாகீருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் விரைந்து வந்து இருவரையும் சமாதானம் செய்தனர். மறுநாளான 28-ந் தேதி அதிகாலையில் முகமது தாகீர் தூங்கி எழுந்தார். அப்போது அறையில் படுத்திருந்த அப்துல் ரகுமானை பார்த்தபோது அவருக்கு மிகுந்த ஆத்திரம் வந்தது. உடனே வீட்டில் இருந்த கிரைண்டர் கல்லை எடுத்து வந்து அப்துல் ரகுமான் தலையில் போட்டு அவரை கொலை செய்தார்.

இதை பார்த்த இப்ராகிம் அதிர்ச்சி அடைந்ததுடன், முகமது தாகீரை பிடிக்க முயற்சி செய்தார். என்னை பிடித்தால் உன்னையும் கொன்று விடுவேன் என மிரட்டி விட்டு அவர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இது குறித்து தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்தில் இப்ராகிம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய முகமது தாகீரை கைது செய்து தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் ஆஜர்படுத்தி வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை நீதிபதி சிவஞானம் விசாரணை செய்து வந்தார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. தீர்ப்பில், மகனை கொலை செய்த முகமது தாகீருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், கட்ட தவறினால் மேலும் 1 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டு இருந்தது.

Next Story