விளாத்திகுளம் அருகே வேன்-மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி நண்பர் படுகாயம்


விளாத்திகுளம் அருகே வேன்-மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி நண்பர் படுகாயம்
x
தினத்தந்தி 29 April 2019 9:45 PM GMT (Updated: 29 April 2019 8:07 PM GMT)

விளாத்திகுளம் அருகே வேன்-மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் பலியானார். அவருடைய நண்பர் படுகாயம் அடைந்தார்.

விளாத்திகுளம்,

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம்-எட்டயபுரம் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சேகர். இவருடைய மகன் சோலைமுருகன் (வயது 21). இவர் டிராக்டர் டிரைவராக வேலை செய்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் வேல்சாமி மகன் மகாராஜா (20). இவர் மோட்டார் சைக்கிள்களை பழுது பார்க்கும் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். நண்பர்களான இவர்கள் 2 பேரும் நேற்று மதியம் ஒரு மோட்டார் சைக்கிளில் விளாத்திகுளத்தில் இருந்து எட்டயபுரம் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். விளாத்திகுளம் அருகே சித்தவநாயக்கன்பட்டி விலக்கு பகுதியில் சென்றபோது, முன்னால் சென்ற வேன் மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.

இந்த விபத்தில் சாலையில் தூக்கி வீசப்பட்ட சோலைமுருகன், மகாராஜா ஆகிய 2 பேரும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடினர். உடனே அவர்களை சிகிச்சைக்காக விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சோலைமுருகன் பரிதாபமாக உயிரிழந்தார். தலையில் படுகாயம் அடைந்த மகாராஜவுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில், விளாத்திகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வேன் டிரைவரான விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகா வடக்கு நத்தம் கிழக்கு தெருவைச் சேர்ந்த மீனாட்சிசுந்தரம் மகன் ஆறுமுகசாமியிடம் (24) விசாரித்து வருகின்றனர்.

விளாத்திகுளம் அருகே சங்கரலிங்கபுரம் தனியார் நூற்பாலையில் நேற்று மதியம் வேலை முடிந்ததும், தொழிலாளர்களை வேனில் அவர்களது வீடுகளுக்கு அழைத்து சென்றனர். அப்போது இந்த விபத்து நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story