கரூரில் விஷம் தின்று வயதான தம்பதி தற்கொலை


கரூரில் விஷம் தின்று வயதான தம்பதி தற்கொலை
x
தினத்தந்தி 30 April 2019 4:30 AM IST (Updated: 30 April 2019 1:48 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் உடல் நலக்குறைவால் வயதான தம்பதி விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டனர்.

கரூர்,

கரூர் வஞ்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 80). இவர் பந்தல் அமைக்கும் ஒப்பந்ததாராக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் திடீரென உடல்நல குறைவால் அவதிப்பட்ட அவர் வேலைக்கு செல்லாமல் கடந்த 6 மாதங்களாக வீட்டிலேயே ஓய்வெடுத்தார். இவரது மனைவி வள்ளியம்மாள் (70). இவர் ஜவுளி நிறுவனங்களுக்கு தினக்கூலி வேலைக்கு ஆட்களை அனுப்பி வைக்கும் முகவராக செயல்பட்டு வந்தார். எனினும் இதில் பெரியளவில் வருமானம் ஏதும் இல்லை.

மேலும் இந்த தம்பதிக்கு குழந்தை ஏதும் இல்லாததால், வீட்டில் தனியாகவே வசித்து வந்தனர். இந்தநிலையில் உடல்நல குறைவால் முருகன் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லையாம். மேலும் முருகனுக்கு மூளைக்கு செல்லும் ரத்த நாளத்தில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

வயோதிக காலத்தினாலும், நோயின் தாக்கத்தினாலும் பல இன்னல்களை சந்திக்க வேண்டியதாக உள்ளதே என முருகன்-வள்ளியம்மாள் தம்பதி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினர். இந்தநிலையில் வாழ்வதை விட சாவதே மேல் என முடிவெடுத்த அவர்கள், நேற்று முன்தினம் இரவில் தனது வீட்டில் தென்னை மரத்துக்கு பூச்சி கொல்லியாக வைக்கப்படும் விஷ மாத்திரைகளை தின்று வாந்தி எடுத்தனர். இவர்களது சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அப்போது விஷ மாத்திரைகளை தின்றதாக வயதான தம்பதி கூறினர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் முருகன்-வள்ளியம்மாள் பரிதாபமாக இறந்தனர். இந்த தற்கொலை சம்பவம் குறித்து கரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வயதான தம்பதி விஷ மாத்திரைகள் தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story