கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா 12-ந்தேதி கம்பம் நடுதலுடன் தொடங்குகிறது


கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா 12-ந்தேதி கம்பம் நடுதலுடன் தொடங்குகிறது
x
தினத்தந்தி 30 April 2019 4:00 AM IST (Updated: 30 April 2019 2:16 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா வருகிற மே மாதம் 12-ந்தேதி கம்பம் நடுதலுடன் தொடங்குகிறது.

கரூர்,

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு அடுத்தபடியாக பிரசித்தி பெற்ற தலமாக கரூர் மாரியம்மன் கோவில் விளங்குகிறது. கோவிலின் அமைப்பு சிறிய அளவில் இருந்த போதிலும், அம்மனின் சக்தி மீது பக்தர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை அதிகம் உள்ளது. அந்த வகையில் வேண்டும் வரம் தரும் அம்மனாகவே கரூர் மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் கடைசியில் திருவிழா தொடங்கி வைகாசி மாதத்தில் முடிவடையும். இதையொட்டி கம்பம் நடப்பட்டு அதனை அமராவதி ஆற்றில் விடும் நிகழ்வு சிறப்பு வாய்ந்ததாகும். இந்த நிகழ்ச்சியின் போது மாவட்டம் முழுவதும் இருந்தும், பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வருவது உண்டு.

12-ந்தேதி விழா தொடக்கம்

மேலும் இந்த திருவிழாக்காலங்களிலும் இடைப்பட்ட நாட்களில் கம்பத்திற்கு புனித நீர் ஊற்றி வழிபாடு நடத்த பக்தர்கள் வருகை தருவது உண்டு. மேலும் அக்னி சட்டி, அலகு குத்தியும், கரும்பு தொட்டிலில் குழந்தையை தூக்கி வந்தும் பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்துவார்கள். முன்பு பழம்பெரும் பாடகியும், நடிகையுமான கே.பி.சுந்தராம்பாள் கரூருக்கு வருகை தந்து பசுபதிபாளையம் அமராவதி ஆற்று நீரில் நீராடிவிட்டு பயபக்தியுடன் கரூர் மாரியம்மனுக்கு அக்னி சட்டி ஏந்தி நேர்த்தி கடன் செலுத்தியதாகவும் வரலாறு கூறுகின்றன. குடிசை வீட்டில் வாழும் ஏழையிலிருந்து செல்வசெழிப்பு-புகழோடு இருப்பவர்கள் வரை அனைவரும் வழிபடும் தெய்வமாக கரூர் மாரியம்மன் திகழ்வது புலப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா வருகிற மே மாதம் 12-ந்தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.கம்பம் நடுதல் என்பது கோவில் அறங்காவலர்கள் பரம்பரையை சேர்ந்தவர்களின் கனவில் அம்மன் தோன்றி கம்பம் இருக்கும் இடத்தை கூறுவது உண்டாம். அதன் அடிப்படையில் அந்த இடத்தில் மரக்கிளைகளில் கம்பம் வெட்டி எடுக்கப்பட்டு கோவிலில் அம்மன் சன்னதிக்கு எதிரே நடப்படுவது உண்டு. இதற்கு பக்தர்கள் தினமும் புனித நீர் ஊற்றி வழிபாடு நடத்துவார்கள். வருகிற 17-ந்தேதி பூச்சொரிதல் விழாவும், வருகிற 19-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. தினமும் அம்மன் பல்லக்கு, மற்றும் ரிஷப, புலி, வெள்ளி உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்க அருள்பாலிக்கிறார். வருகிற 27-ந் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.

கம்பம் ஆற்றில் விடுதல்

விழாவில் 26-ந்தேதி பக்தர்கள் பால் குடம், மாவிளக்கு, எடுத்து வரும் நிகழ்ச்சியும், 27, 28-ந் தேதிகளில் பக்தர்கள் அக்னி சட்டி, அலகு காவடி எடுத்து வருதலும் நடைபெற உள்ளது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் ஆற்றில் விடும் நிகழ்ச்சி வருகிற 29-ந்தேதி மாலை 5.15 மணிக்கு நடைபெற உள்ளது. ஜூன் 6-ந்தேதி பஞ்சபிரகார நிகழ்ச்சியும், 7-ந் தேதி புஷ்ப பல்லக்கில் அம்மன் வீதி உலா நிகழ்ச்சியும், 8-ந்தேதி ஊஞ்சல் உற்சவமும் நடைபெற உள்ளது. 9-ந்தேதி அம்மன் குடிபுகுதல் நிகழ்ச்சியுடன் விழா முடிவடைகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். விழாவையொட்டி கோவில் முன்பு அலங்கார பந்தல் மற்றும் மேற்கூரை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 

Next Story