கருவடிக்குப்பத்தில் ஜிப்மர் ஊழியருக்கு அரிவாள் வெட்டு 3 பேருக்கு வலைவீச்சு
கருவடிக்குப்பத்தில் ஜிப்மர் ஊழியரை அரிவாளால் வெட்டிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
புதுச்சேரி,
புதுச்சேரி கருவடிக்குப்பம் பொன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் ராஜா (வயது 35). ஜிப்மர் மருத்துவமனையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரதீப் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
நேற்று முன்தினம் இரவு ராஜா மோட்டார் சைக்கிளில் கருவடிக்குப்பம் கருமுத்து மாரியம்மன் கோவில் அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது பிரதீப் தனது நண்பர்கள் வேணு, அவதார் ஆகியோருடன் சேர்ந்து ராஜாவை வழிமறித்து தாக்கி, அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ், சப்–இன்ஸ்பெக்டர் வீரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரதீப் உள்பட 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.