நீலகிரி மாவட்ட மாணவ-மாணவிகள் விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்


நீலகிரி மாவட்ட மாணவ-மாணவிகள் விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 29 April 2019 11:00 PM GMT (Updated: 29 April 2019 11:11 PM GMT)

நீலகிரி மாவட்ட மாணவ-மாணவிகள் சிறப்பு விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஊட்டி,

இது தொடர்பாக நீலகிரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சேதுராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் கீழ் கல்லூரி மாணவ-மாணவிகள் விளையாட்டு துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப விஞ்ஞான ரீதியான பயிற்சி, தங்குமிடம், சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. சென்னையில் மாணவர்களுக்கான விடுதி ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கிலும், மாணவிகளுக்கான விடுதி நேரு உள்விளையாட்டு அரங்கிலும் உள்ளது.

இந்த விடுதிகளில் சேர்ந்து விளையாட்டுகளில் பயிற்சி பெற்று சிறந்த வீரர்களாக விளங்குவதற்கு 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் தகுதி உடையவர் ஆவார்கள். தனி போட்டிகளில் விண்ணப்பிப்பவர்கள் மாநில அளவில் பாரதியார் தின விளையாட்டு போட்டிகள், அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டுகழகங்கள் நடத்தும் போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாடு அணியில் தேர்வு செய்யப்பட்டு தேசிய விளையாட்டு சம்மேளனங்கள், இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு, மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் நடத்தும் போட்டிகளில் கலந்துகொண்டவர்களும் விண்ணப்பிக்கலாம்.

குழு போட்டிகளில் மாநில அளவில் குடியரசு மற்றும் பாரதியார் தின விளையாட்டு போட்டிகள், விளையாட்டு கழகங்கள் நடத்தும் போட்டிகளில் முதல் இரண்டு இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். கையுந்து பந்து விளையாட்டில் 185 சென்டி மீட்டருக்கு மேல் உயரம் உள்ள மாணவ-மாணவிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 2019-2020-ம் ஆண்டுக்கான சேர்க்கை தற்போது நடைபெற உள்ளது. இதில் தடகளம், கூடைப்பந்து, குத்துச்சண்டை, கையுந்து பந்து, பளுதூக்குதல், வாள்சண்டை, இறகுபந்து, ஜூடோ, துப்பாக்கி சுடுதல் ஆகிய விளையாட்டுகளில் சேர்க்கை நடக்கிறது.

விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வம் உள்ள மாணவ-மாணவிகள் www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை நாளை மறுநாள்(வியாழக்கிழமை) மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேற்கண்ட விடுதியில் சேர விரும்பும் மாணவ-மாணவிகளுக்கு மாநில அளவிலான தேர்வு 3-ந் தேதி சென்னையில் நடைபெறுகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கல்லூரி மாணவ-மாணவிகள் இந்த விளையாட்டு விடுதியில் சேர்ந்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

Next Story