திருப்போரூர் அருகே கார் மோதி பெண் துப்புரவு தொழிலாளி சாவு டிரைவரை தாக்கியதால் பரபரப்பு


திருப்போரூர் அருகே கார் மோதி பெண் துப்புரவு தொழிலாளி சாவு டிரைவரை தாக்கியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 1 May 2019 4:30 AM IST (Updated: 30 April 2019 11:54 PM IST)
t-max-icont-min-icon

திருப்போரூர் அருகே கார் மோதி பெண் துப்புரவு தொழிலாளி பரிதாபமாக இறந்தார். டிரைவரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்போரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூரை அடுத்த ஆலத்தூர் சாமுண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குப்பம்மாள் (வயது 56). ஆலத்தூர் மின்வாரிய நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வந்தார். கணவர் இறந்த நிலையில் மகன் பரசுராமனுக்கு (36) வருகிற 6-ந்தேதி திருமணம் நடைபெற இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குப்பம்மாள் ஆலத்தூர் பஸ்நிலையம் அருகே சாலையோரம் பஸ்சுக்காக காத்திருந்தார்.

அப்போது சென்னையில் இருந்து மாமல்லபுரம் நோக்கி சென்ற கார் குப்பம்மாள் மீது மோதியது. இதில் குப்பம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். டிரைவர் காரை நிறுத்தாமல் தப்பிச்சென்றார்.

இதை பார்த்த அந்த பகுதி மக்கள் காரை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்று மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி சுங்கச்சாவடியில் காரை மடக்கி பிடித்து டிரைவரை சரமாரியாக அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கார் டிரைவரை திருப்போரூர் போலீசில் ஒப்படைத்தனர். குப்பம்மாளின் உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது

விசாரணையில் கார் டிரைவர் சிதம்பரம் பகுதியை சேர்ந்த பிரவீன் (23) என்பது தெரியவந்தது. பொதுமக்கள் தாக்கியதில் காயம் அடைந்த பிரவீன் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று திரும்பினார். திருப்போரூர் போலீசார் பிரவீனிடம் விசாரித்து வருகின்றனர்.
1 More update

Next Story