கந்தர்வகோட்டை பணிமனையில் பாம்பு கடித்து அரசு பஸ் கண்டக்டர் சாவு


கந்தர்வகோட்டை பணிமனையில் பாம்பு கடித்து அரசு பஸ் கண்டக்டர் சாவு
x
தினத்தந்தி 30 April 2019 11:15 PM GMT (Updated: 2019-05-01T00:31:06+05:30)

கந்தர்வகோட்டை பணிமனையில் பாம்பு கடித்து அரசு பஸ் கண்டக்டர் இறந்தார். பிரேத பரிசோதனை ரசீதில் தொழிலாளி என எழுதியதால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர்,

தஞ்சை கீழவஸ்தாசாவடியை சேர்ந்தவர் கோவிந்தராஜன். இவரது மகன் புண்ணியமூர்த்தி(வயது 32). இவர், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் புதுக்கோட்டை மண்டல கந்தர்வகோட்டை பணிமனையில் கண்டக்டராக பணி புரிந்து வந்தார். நேற்று முன்தினம் அதிகாலை மதுரைக்கு செல்லும் பஸ்சில் கண்டக்டராக பணிக்கு செல்வதற்காக பணிமனை வளாகத்தில் உள்ள குளியல் அறைக்கு குளிப்பதற்காக சென்றார்.

குடிநீர் போர்வெல் அருகே செடி, கொடிகள் வளர்ந்து, குப்பைகளும் காணப்பட்டன. இதை கடந்து சென்றபோது புண்ணியமூர்த்தியை பாம்பு கடித்துவிட்டது. உடனே சக ஊழியர்கள், அவரை அரசு பஸ்சில் ஏற்றி கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று புண்ணியமூர்த்தி பரிதாபமாக இறந்தார்.

இவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்புவதற்காக வழங்கிய ரசீதில், அரசு போக்குவரத்து கழக கண்டக்டர் என எழுதப்பட்டிருந்ததை அடித்து விட்டு கூலித்தொழிலாளி என டாக்டர்கள் எழுதியிருந்ததாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரேத பரிசோதனை கூடம் முன்பு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் மற்றும் புண்ணியமூர்த்தியின் உறவினர்கள் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும் புண்ணியமூர்த்தி உடல் ஏற்றப்பட்டு இருந்த ஆம்புலன்சையும் வழிமறித்தனர்.

அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலருக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் பிரேத பரிசோதனை கூடம் முன்பு மீண்டும் போக்குவரத்துக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது அவர்கள், பிரேத பரிசோதனை ரசீதில் அரசு போக்குவரத்து கழக கண்டக்டர் என எழுதப்பட்டதை கூலித்தொழிலாளி என எழுதியதை கண்டித்தும், கந்தர்வ கோட்டை பணிமனையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும், சுற்றுச்சுவர் கட்டி கொடுக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.

இது குறித்து போக்குவரத்துக்கழக தொழிற்சங்க நிர்வாகிகள் கூறும்போது, கந்தர்வகோட்டை பணிமனையில் அடிப்படை வசதிகள் இல்லையென பல்வேறு போராட்டங்கள் நடத்தியுள்ளோம். சுற்றுச்சுவர் இல்லாததால் பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. போக்குவரத்து தொழிலாளர்களுக்கு காப்பீட்டு திட்டம் கிடையாது. அரசு போக்குவரத்து கழக கண்டக்டர் என எழுதப்பட்டதை அடித்து விட்டு கூலித்தொழிலாளி என எழுதி இருக்கிறார்கள். ஒருவேளை காப்பீட்டு திட்டம் எங்களுக்கு கிடையாது என்பதால் இப்படி எழுதினார்களா? என தெரியவில்லை.

இது குறித்து விசாரணை நடத்தப்படும். இறந்த புண்ணியமூர்த்தி குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டு தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும். இதுபோன்ற உயிரிழப்பு இனி நடைபெறாமல் இருக்க அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்றனர்.

இந்த பிரச்சினை மருத்துவ நிர்வாகத்தினரின் கவனத்திற்கு சென்றதால் கண்டக்டர் என எழுதி கொடுத்து விடும்படி கூறினர். இதையடுத்து பிரேத பரிசோதனை ரசீதில் அரசு போக்குவரத்துக்கழக கண்டக்டர் என எழுதப்பட்டதையடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்ட புண்ணியமூர்த்தி உடலை போக்குவரத்துக்கழக ஊழியர்களும், புண்ணியமூர்த்தியின் உறவினர்களும் பெற்றுச்சென்றனர்.

முன்னதாக ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் இறந்தவரின் உடலை ஊழியர்கள் சிறிது தூரம் தூக்கி சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story