பெண் ஊழியர் பாலியல் புகார்: நெல்லை துணை கலெக்டர் பணியிடை நீக்கம் கோவில்பட்டியை சேர்ந்தவர்


பெண் ஊழியர் பாலியல் புகார்: நெல்லை துணை கலெக்டர் பணியிடை நீக்கம் கோவில்பட்டியை சேர்ந்தவர்
x
தினத்தந்தி 30 April 2019 9:45 PM GMT (Updated: 2019-05-01T01:50:43+05:30)

பெண் ஊழியர் கொடுத்துள்ள பாலியல் புகார் விவகாரத்தில் நேற்று ஓய்வுபெறும் நாளில் நெல்லை துணை கலெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

நெல்லை,

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்ட நீதிமன்ற தனி துணை கலெக்டராக ராமசுப்பிரமணியன் பணியாற்றி வந்தார். இவர், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நெல்லை மாவட்ட கலால்துறை உதவி ஆணையாளராக பணியாற்றினார். அப்போது சுப்பிரமணியன் மீது உதவியாளர் நிலையில் பணியாற்றும் பெண் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்தார்.

அப்போதைய கலெக்டர் கருணாகரன், உதவி கலெக்டர் பெர்மி வித்யாவை அந்த புகார் மீது விசாரணை நடத்த உத்தரவிட்டார். அவர் விசாரணை நடத்தினார். சுப்பிரமணியன் மீது கூறிய குற்றச்சாட்டுகளுக்கு எந்தவிதமான ஆதாரம் இல்லை என உதவி கலெக்டர் பெர்மி வித்யா, கலெக்டருக்கு அறிக்கை சமர்ப்பித்தார். அந்த அறிக்கை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த புகார் மனுவை மீண்டும் விசாரிக்க வேண்டும் என சம்பத்தப்பட்ட பெண், வக்கீல் ஒருவர் மூலம் உயர் அதிகாரிகளுக்கு மனு கொடுத்தார். அதில், அரசு துறைகளில் பணியாற்றும் பெண் பணியாளர்கள் அளிக்கும் பாலியல் புகார்களை விசாரிக்க அமைக்கப்பட்டு உள்ள விசாகா கமிட்டி மூலம் விசாரணை நடத்த வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து டாஸ்மாக் நிர்வாக இயக்குனரும், கலால் துறை கமிஷனருமான (பொறுப்பு) கிர்லோஸ்குமார் பரிந்துரையின் பேரில் இந்த புகார் மனுவை விசாரிக்க நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பாவுக்கு உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து நெல்லை மாவட்ட விசாகா கமிட்டி தலைவரும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலருமான ஜெயசூர்யா தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தினர். இந்த விசாகா கமிட்டி விசாரணைக்கு பல்வேறு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். இந்த கமிட்டி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. விசாரணை முழுமையாக முடியவில்லை.

இந்த நிலையில் தனி துணை கலெக்டர் ராமசுப்பிரமணியனை நேற்று திடீரென்று பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து அரசு உத்தரவிட்டது. அவர் நேற்று ஓய்வு பெற இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஓய்வு பெறும் நாளில் தனி துணை கலெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் நெல்லை மாவட்ட வருவாய்த்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story