இலங்கை குண்டு வெடிப்பு எதிரொலி: பழனி முருகன் கோவிலில் சிறப்பு பாதுகாப்பு படையினர் ஆய்வு


இலங்கை குண்டு வெடிப்பு எதிரொலி: பழனி முருகன் கோவிலில் சிறப்பு பாதுகாப்பு படையினர் ஆய்வு
x
தினத்தந்தி 30 April 2019 11:15 PM GMT (Updated: 30 April 2019 9:56 PM GMT)

இலங்கை குண்டு வெடிப்பு எதிரொலியாக பழனி முருகன் கோவிலில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உயர்மட்ட பாதுகாப்பு சிறப்பு பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

பழனி,

இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள முக்கிய ஆன்மிக தலங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களான ரெயில்நிலையம், பஸ்நிலையம், பூங்காக்கள், சுற்றுலா தலங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அங்கு மெட்டல் டிடெக்கர் கருவி மூலம் பயணிகள், பக்தர்களும் சோதனை செய்யப்பட்ட பின் அனுமதிக்கப்படுகிறார்கள்.

அந்த வகையில் அறுபடை வீடுகளில் 3–ம் படைவீடான பழனி முருகன் கோவிலிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவிலுக்கு வரும் பக்தர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு பக்தர்களின் உடைமைகளும் சோதனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் நேற்று சென்னையில் இருந்து உயர்மட்ட பாதுகாப்பு படை சிறப்பு துணை சூப்பிரண்டு வசந்தன் தலைமையில் 10–க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் பழனி முருகன் கோவிலுக்கு வந்தனர். பின்னர் அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர். அப்போது கிரிவீதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை கண்காணித்தனர்.

பின்னர் ரோப்கார் நிலையத்துக்கு சென்று அங்கு பக்தர்கள் செல்லும் வழிகளில் உள்ள மெட்டல் டிடெக்கர் கருவி முறையாக செயல்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து அங்கு பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த அறிவுரைகளை வழங்கினர்.

பின்னர் ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்ற அதிகாரிகள் வெளிப்பிரகாரம், அன்னதான கூடம், உட்பிரகாரம், கோவில் அலுவலகம், பஞ்சாமிர்த விற்பனை நிலையம் ஆகிய இடங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். மேலும் தரிசன வழிகள் ஆகிய இடங்களுக்கு சென்று அங்குள்ள தீத்தடுப்பு கருவிகள் பயன்பாடு குறித்து பணியாளர்களிடம் கேட்டறிந்தனர்.

இதையடுத்து அதிகாரிகள் படிப்பாதை வழியாக அடிவார பகுதிக்கு வந்தனர். தொடர்ந்து கோவில் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு விவேகானந்தன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு, பழனி கோவிலில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.


Next Story