3 ஆண்டுகளாக நலத்திட்டங்களை தடுத்த கவர்னர் கிரண்பெடி மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்; ஐகோர்ட்டு தீர்ப்பு குறித்து நாராயணசாமி கருத்து


3 ஆண்டுகளாக நலத்திட்டங்களை தடுத்த கவர்னர் கிரண்பெடி மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்; ஐகோர்ட்டு தீர்ப்பு குறித்து நாராயணசாமி கருத்து
x
தினத்தந்தி 1 May 2019 5:08 AM IST (Updated: 1 May 2019 5:08 AM IST)
t-max-icont-min-icon

3 ஆண்டுகளாக நலத்திட்டங்களை தடுத்த கவர்னர் கிரண்பெடி மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஐகோர்ட்டு தீர்ப்பு குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

புதுவை அரசு நிர்வாகத்தில் தலையிட கவர்னர் கிரண் பெடிக்கு தடை விதித்து ஐகோர்ட்டு நேற்று உத்தர விட்டது.

இதுகுறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

சுப்ரீம் கோர்ட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் நடவடிக்கைகளில் கவர்னர் (துணைநிலை ஆளுநர்) தலையிடுவது தொடர்பாக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பில் அரசின் அன்றாட முடிவுகளை எடுக்கும் அதிகாரம் முதல்-அமைச்சர், அமைச்சர்களுக்குத்தான் உள்ளது. கவர்னருக்கு தனிப்பட்ட அதிகாரம் கிடையாது.

அமைச்சரவையின் முடிவே இறுதியானது, அரசின் செயல்பாடுகளில் கவர்னர் தலையிடக் கூடாது, மாநில வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் என்று கூறியது. கவர்னர், அமைச்சரவைக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால் ஜனாதிபதியிடம் அனுப்பவேண்டும் என்று கூறி இருந்தது.

இந்த தீர்ப்பு புதுச்சேரிக்கும் பொருந்தும் என்று மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பினோம். ஆனால் உள்துறை அமைச்சகம் மாறுபட்ட கருத்தை கூறியது. அதாவது கவர்னருக்குத்தான் அதிகாரம் உள்ளது என்று தெரிவித்தது.

இதை எதிர்த்து முதல்-அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் மூத்த வக்கீல்கள் சிதம்பரம், கோபாலன், சுந்தரேசன் ஆகியோர் வாதிட்டனர். தற்போது வழக்கின் தீர்ப்பு வந்துள்ளது. அந்த தீர்ப்பில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் உள்ளது என்றும் கவர்னருக்கு அதிகாரம் கிடையாது என்றும் கூறப்பட்டுள்ளது.

நிர்வாகத்தின் நியமனம், நிதி ஆதாரம் என்பன போன்ற விஷயங்களில் முடிவு எடுக்கும் அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் உள்ளது. கவர்னருக்கு தனிப்பட்ட அதிகாரம் கிடையாது. அரசின் முடிவுகளுக்கு கவர்னர் கட்டுப்பட வேண்டும் என்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை ஐகோர்ட்டு அளித்துள்ளது.

இதன் மூலம் ஜனநாயகம் வென்றுள்ளது. 3 ஆண்டு கால போராட்டத்தில் மக்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது. மக்கள் அரசுக்குத்தான் அதிகாரம் என்பது இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுவை மாநில வளர்ச்சிக்கு மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்ற கவர்னரின் கொட்டத்தை அடக்க கிடைத்த தீர்ப்பு இது. இந்த தீர்ப்பின் மூலம் புதுவை மக்கள் வெற்றிபெற்றுள்ளனர்.

கடந்த 3 ஆண்டுகாலம் மக்கள் நலத் திட்டங்களை தடுத்த கவர்னர் கிரண்பெடி மன்னிப்பு கேட்கவேண்டும். அவரை புதுவைக்கு அனுப்பி தொல்லை கொடுத்த பிரதமர் மோடி இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
1 More update

Next Story