திருச்சி விமான நிலையத்தில் ரூ.31 லட்சம் தங்க சங்கிலிகள் பறிமுதல் 3 பயணிகளிடம் விசாரணை


திருச்சி விமான நிலையத்தில் ரூ.31 லட்சம் தங்க சங்கிலிகள் பறிமுதல் 3 பயணிகளிடம் விசாரணை
x
தினத்தந்தி 2 May 2019 4:30 AM IST (Updated: 2 May 2019 12:29 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி விமான நிலையத்தில் ரூ.31 லட்சம் தங்க சங்கிலிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 3 பயணிகளிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருச்சி,

திருச்சியில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளில் சிலர் தங்கம் மற்றும் வெளிநாட்டு பணம் போன்றவற்றை கடத்தி வரும் சம்பவங்கள் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இதை தடுக்க, விமானங்களில் வரும் பயணிகள் மற்றும் அவர்களுடைய உடைமைகளை திருச்சி விமான நிலைய மத்திய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் மலேசியாவில் இருந்து திருச்சி வழியாக தங்கம் கடத்துவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், மலேசியாவில் இருந்து நேற்று முன்தினம் இரவு திருச்சிக்கு வந்த ஏர்ஏசியா விமானம் மற்றும் மலிண்டோ விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அப்போது, சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்த தமீம்அன்சாரி, புதுக்கோட்டையை சேர்ந்த சாபுபரலி, கடலூரை சேர்ந்த முகமதுகியாஸ் ஆகிய பயணிகள் தங்க சங்கிலிகளை மறைத்து கடத்துவது கண்டு பிடிக்கப்பட்டது. அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் கமிஷன் அடிப் படையில் அவற்றை கடத்தி வந்ததாக தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, 3 பேரிடம் இருந்து மொத்தம் 957 கிராம் தங்கசங்கிலிகளை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.31 லட்சம் ஆகும். மேலும் அவர்கள் 3 பேரிடமும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story