அனைவரையும் வாக்களிக்க வலியுறுத்திய நடிகர் அக்‌ஷய் குமார் ஓட்டுப்போடவில்லை


அனைவரையும் வாக்களிக்க வலியுறுத்திய நடிகர் அக்‌ஷய் குமார் ஓட்டுப்போடவில்லை
x
தினத்தந்தி 1 May 2019 10:18 PM GMT (Updated: 2019-05-02T03:48:08+05:30)

மும்பையில் உள்ள 6 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு கடந்த 29-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. அப்போது, இந்தி திரைப்பட நட்சத்திரங்கள் ஆர்வமாக வந்து வாக்களித்தனர்.

மும்பை,

பல நட்சத்திரங்கள் தங்களது மை வைத்த விரலை காட்டியபடி உள்ள புகைப்படங்களை வலைத்தளங்களில் பதிவு செய்தனர். ஆனால் பிரபல இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் வாக்களிக்கவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. 

ரஜினிகாந்தின் 2.0 படத்தில் வில்லனாக நடித்தவர் நடிகர் அக்‌ஷய் குமார் . சமீபத்தில் பிரதமர் மோடியிடம் அரசியல் சாராத கேள்விகளை கேட்டு பேட்டி கண்டார். ஓட்டுப்போடுவதை ஊக்குவிக்க வேண்டும் என்ற மோடியின் வேண்டுகோளை ஏற்று, ஓட்டுரிமையின் மகத்துவம் குறித்து வாக்காளர்களிடம் அக்‌ஷய் குமார் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். 

கேசரி, டாய்லட் ஏக் பிரேம் கதா, ஏர்லிப்ட் போன்ற படங்களில் அவர் தேசியவாதத்தை வலியுறுத்தும் வகையில் நடித்து இருந்தார். ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் ஜனநாயக கடமையாற்றாமல் புறக்கணிப்பு செய்த அவரை வலைத்தள நெட்டிசன்கள் கேள்வி கணைகளால் துளைத்து எடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் மும்பையில் நடந்த ‘பிளாங்’ திரைப்பட சிறப்பு காட்சியின் போது, ஓட்டுப்போடாதது குறித்து அவரிடம் நிருபர்கள் சரமாரி கேள்வி எழுப்பினர். ஆனால் அதற்கு பதில் எதுவும் அளிக்காமல் அவர் வேக வேகமாக சென்று விட்டார். அனைவரும் வாக்களிக்க வேண்டுகோள் விடுத்த பிரபல நடிகர் ஒருவர் ஜனநாயக கடமையாற்றாதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Next Story