சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்; பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது


சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்; பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
x
தினத்தந்தி 1 May 2019 10:45 PM GMT (Updated: 1 May 2019 10:31 PM GMT)

சென்னை விமான நிலையத்துக்கு மர்மநபர் தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். இதையடுத்து விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

ஆலந்தூர்,

இலங்கையில் நடைபெற்ற தொடர் வெடிகுண்டு தாக்குதலை தொடர்ந்து இந்தியாவிலும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற எச்சரிக்கையை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

பார்வையாளர்கள் அனுமதி ரத்தும் நீட்டிக்கப்பட்டு உள்ளது. விமான நிலையம் வரும் பயணிகள் மற்றும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதி அளிக்கப்படுகிறார்கள்.

இந்த நிலையில் சென்னை விமான நிலைய மேலாளர் அறையில் உள்ள தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆங்கிலத்தில் பேசிய மர்ம ஆசாமி ஒருவர், ‘‘விமான நிலையத்தில் குண்டு வெடிக்கும்’’ என்று கூறிவிட்டு, இணைப்பை துண்டித்துவிட்டார்.

இதையடுத்து விமான நிலைய அதிகாரிகள் உஷாராகி விமான நிலையத்தில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விமான நிலையம் முழுவதும் தீவிர சோதனை செய்ததில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. பின்னர் அது வெறும் புரளி என தெரிய வந்தது.

எனினும் விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக விமான நிலைய போலீசில் புகார் செய்யப்பட்டது.

அதன்பேரில் போலீசார், போனில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்?, எங்கிருந்து பேசினார்? என அந்த தொலைபேசி எண்ணை வைத்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story