பல்லாரியில் சுட்டெரிக்கும் கோடை வெயிலால் தர்பூசணியுடன் திருமண அழைப்பிதழ் வழங்கும் பேராசிரியர்


பல்லாரியில் சுட்டெரிக்கும் கோடை வெயிலால் தர்பூசணியுடன் திருமண அழைப்பிதழ் வழங்கும் பேராசிரியர்
x
தினத்தந்தி 1 May 2019 10:44 PM GMT (Updated: 1 May 2019 10:44 PM GMT)

பல்லாரியில் சுட்டெரிக்கும் கோடை வெயில் காரணமாக தர்பூசணியுடன் திருமண அழைப்பிதழை கல்லூரி பேராசிரியர் வழங்கி வருகிறார்.

பெங்களூரு,

திருமணத்தின்போது பல்வேறு தரப்பினர் தங்களின் வசதிக்கு ஏற்ப அழைப்பிதழ் அச்சிட்டு உறவினர்கள், நண்பர்களுக்கு வழங்கி வருகிறார்கள். ஆனால், தற்போது கோடை வெயில் கர்நாடகத்தில் சுட்டெரித்து வருகிறது. இதனால் வெப்பம் தாங்காமல் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

இதனை கருத்தில் கொண்டு கர்நாடகத்தில் பேராசிரியர் ஒருவர் தர்பூசணியுடன் தனது திருமண அழைப்பிதழை உற்றார், உறவினர்களுக்கு வழங்கி வருகிறார். அதுபற்றிய விவரம் வருமாறு:-

பல்லாரி டவுனில் வசித்து வருபவர் சாய் சந்தீப். இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் தேஜஸ்வினி என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு உள்ளது.

இவர்களின் திருமணம் வருகிற 9-ந் தேதி பல்லாரியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. திருமணத்துக்கான ஏற்பாடுகளை சாய்சந்தீப், தேஜஸ்வினி ஆகியோரின் குடும்பத்தினர் தடபுடலாக செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில், திருமணத்தையொட்டி சாய் சந்தீப் உறவினர்கள், நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்து வருகிறார். இவர் தனது திருமணத்துக்காக தயாரித்துள்ள அழைப்பிதழ் வித்தியாசமாக உள்ளது.

அதாவது மணமகன் சாய்சந்தீப், மணமகள் தேஜஸ்வினி ஆகியோரின் பெயர்களும், திருமணம் நடைபெறும் தேதி, இடம், நேரம் ஆகியவற்றை கன்னடம், ஆங்கில மொழிகளில் எழுதிய ‘ஸ்டிக்கரை’ தர்பூசணி மீது ஒட்டி வழங்கி வருகிறார். சாய் சந்தீப்பின் இத்தகைய செயலுக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

இதுகுறித்து சாய்சந்தீப் கூறுகையில், ‘எனது திருமண அழைப்பிதழை வித்தியாசமாக கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அதன்படி, தர்பூசணி திருமண அழைப்பிதழை உறவினர்கள், நண்பர்களுக்கு வழங்கி வருகிறேன். பலஆயிரம் ரூபாய் செலவழித்து திருமண அழைப்பிதழ் கொடுத்தால் சில நாட்களில் அந்த அழைப்பிதழ் குப்பைக்கு சென்று விடும். ஆனால், தர்பூசணியில் திருமண அழைப்பிதழை ஒட்டி வழங்குவதன் மூலம் அவர்கள் அதை படித்து வைத்து கொள்வதுடன், அந்த பழத்தையும் உண்ணலாம். மேலும் தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருவதால், தர்பூசணி பழம் சாப்பிட்டால் உடல் சூட்டை தணிக்கும். அதனால் எனது திருமண அழைப்பிதழுடன் தர்பூசணி பழங்கள் வழங்கி வருகிறேன்.

இதுவரை 600 பழங்களுடன் அழைப்பிதழ் கொடுத்துள்ளேன். இன்னும் 200 அழைப்பிதழ் கொடுக்க வேண்டியுள்ளது. இதுபற்றி எனது குடும்பத்தினரிடம் கூறியபோது அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. ஏனெனில் தர்பூசணியை ஒவ்வொரு கிராமத்துக்கு எடுத்து செல்வது சிரமமானது. இதனால் அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. இருப்பினும் தற்போது நான் எனது நண்பர்களின் உதவியுடன் தர்பூசணியுடன் திருமண அழைப்பிதழை கொடுத்து வருகிறேன்’ என்றார்.

Next Story