கூட்டணி ஆட்சியை கவிழ்க்க காங்கிரஸ் தலைவர்கள் முயற்சி - பா.ஜனதா குற்றச்சாட்டு
குமாரசாமி முதல்-மந்திரியாக இருப்பது பிடிக்காததால் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க காங்கிரஸ் தலைவர்கள் முயற்சிக்கிறார்கள் என்று பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் துணை முதல்-மந்திரி அசோக் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
பெங்களூரு,
பெங்களூருவில் நேற்று முன்னாள் துணை முதல்-மந்திரி அசோக் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா நினைப்பதாக காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) தலைவர்கள் பொய் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா ஒரு போதும் முயற்சிக்கவில்லை. குமாரசாமி முதல்-மந்திரியாக இருப்பது காங்கிரஸ் தலைவர்களுக்கு பிடிக்கவில்லை. அவரை அந்த பதவியில் இருந்து இறக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் நினைக்கின்றனர்.
அதனால் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு கூட்டணி ஆட்சியை காங்கிரஸ் தலைவர்களே கலைத்து விடுவார்கள். அதற்கான முயற்சியில் தற்போது காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனா். நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு 2 கட்சிகளின் நிலை என்ன? என்பது தெரிந்து விடும்.
கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா முயற்சிப்பதாக குற்றச்சாட்டு கூறிவிட்டு, எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் நடவடிக்கையில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சி தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதை நிரூபிக்கும் விதமாக பா.ஜனதா எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசும் ஆடியோ ஆதாரங்கள் வெளியாகி உள்ளது. பா.ஜனதாவினர் ஆபரேஷன் தாமரையில் ஈடுபடுவதாக கூறிவிட்டு, தற்போது கூட்டணி கட்சி தலைவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.
எக்காரணத்தை கொண்டும் கூட்டணி ஆட்சி நீண்ட நாட்கள் நீடிக்க போவதில்லை. ரமேஷ் ஜார்கிகோளி காங்கிரசில் இருந்து விலக ஒரு காலை வெளியே வைத்துள்ளார். சதீஸ் ஜார்கிகோளி எப்போது என்ன முடிவு எடுப்பார் என்பது தெரியவில்லை. ஏனெனில் குந்துகோல் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளராக மந்திரி டி.கே.சிவக்குமாரை நியமித்திருப்பது சதீஸ் ஜார்கிகோளிக்கு பிடிக்கவில்லை. அவர்கள் 2 பேருக்கும் இடையே மோதல் உருவாகி இருக்கிறது.
இவ்வாறு அசோக் கூறினார்.
Related Tags :
Next Story