சோளிங்கர் அருகே, பட்டாசு குடோனில் நாட்டு வெடி வெடித்து சிறுவன் சாவு - உரிமையாளர் கைது


சோளிங்கர் அருகே, பட்டாசு குடோனில் நாட்டு வெடி வெடித்து சிறுவன் சாவு - உரிமையாளர் கைது
x
தினத்தந்தி 2 May 2019 5:01 AM IST (Updated: 2 May 2019 5:01 AM IST)
t-max-icont-min-icon

சோளிங்கர் அருகே பட்டாசு தொழிற்சாலையில் நாட்டு வெடி வெடித்ததில் சிறுவன் பலியானான்.

சோளிங்கர்,

சோளிங்கர் அருகே உள்ள தொண்டைமாநத்தம் கிராமத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் கடந்த 3 ஆண்டுக்கும் மேலாக பட்டாசு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை கொண்டு இங்கு பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. நேற்று முன்தினம் மதியம் இங்கு சதீஷ் (வயது 14), சரவணன் (28) ஆகியோர் வேலை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது தொழிற்சாலையின் குடோனில் இருந்து இருவரும் நாட்டு வெடிகளை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் அந்த வெடிகள் ஒன்றுடன் ஒன்று உராய்ந்ததில் அழுத்தம் காரணமாக திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தன. இந்த சம்பவத்தில் சதீஷ் அந்த இடத்திலேயே உடல் கருகி பலியானான். சரவணன் படுகாயம் அடைந்தார்.

அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சரவணனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே பட்டாசுகள் வெடித்த சத்தம் கேட்டு அந்த பகுதி பொதுமக்கள் சோளிங்கர் போலீசாருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்தனர்.

தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்து சதீஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சோளிங்கர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், ராணிப்பேட்டை சப்-கலெக்டர் இளம்பகவத், தாசில்தார் பூமா, அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயக்குமார் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டார். இதனிடையே சம்பவம் நடந்ததும் தொழிற்சாலை உரிமையாளரான சசிக்குமார் (33) தலைமறைவாகி விட்டார்.

இது குறித்து சோளிங்கர் போலீசார் வழக்குப் பதிவு செய்து உரிமையாளர் சசிக்குமாரை கைது செய்தனர். 

Next Story